சிவகங்கை, மே 13
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் வறட்சி மேலாண்மை பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி விளக்கமாக எடுத்து கூறினார்.
போதிய தண்ணீர் வசதியுள்ள காலங்களில் பெரும்பாலான நம் உழவர்கள் தென்னைக்கு தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் பாய்ச்சுகின்றனர். சில வட்டப் பாத்திகளில் பாசி படியும் அளவிற்கு நீர் தேக்கி நிறுத்தப்படுகிறது.
தண்ணீரைத் தொடர்ந்து தேக்கி நிறுத்துவதால் மரங்களின் வேர்கள் ஆழமாகவும், பக்கவாட்டிலும் பரந்து விரிந்து செல்வது தடுக்கப்படும். இது போன்ற நீர் உபரி சூழலுக்கு பழக்கப்பட்ட தென்னை மரங்கள் வறட்சிக் காலங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, போதிய நீர்ப்பாசன வசதிகள் இருக்கும் பொழுதும் உழவர்கள் காய்ச்சலும் பாய்ச்சலும் உத்திகளை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தென்னையில் வறட்சி மேலாண்மைக்காக கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடித்து தென்னையை வறட்சியின் பிடியிலிருந்து காப்பாற்றலாம்.
i) நிலப்போர்வை அமைத்தல்
நிலப்போர்வை அமைத்தல் என்பது மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும் ஒரு மிக எளிய தொழில்நுட்பமாகும். இம்முறையில் கீழே விழும் காய்ந்த தென்னை மட்டையின் அடிப்பகுதியை வெட்டிவிட்டு, ஓலைகளை வட்டப் பாத்திகளில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் பரப்ப வேண்டும். ஒரு பாத்திக்கு 15-20 ஓலைகள் தேவைப்படும். ஓலைகளை இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டியும் போடலாம். போதிய தண்ணீர் இருந்தால், இந்த ஓலைகள் மக்கி நல்லதொரு எருவாகவும் அமையும். இரசாயன உரங்களை இடும் பொழுது ஓலைகளை ஒதுக்கி விட்டு உரங்களை வட்டப்பாத்திகளில் இடலாம். ஓலைகள் மக்க ஆரம்பிக்கும் பொழுது புதிய ஓலைகளை அதன் மேல் பரப்ப வேண்டும். நிலப்போர்வை அமைத்தலால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மேலும், இயற்கையான முறையில் களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ii) உரிமட்டை பதித்தல்
இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட வட்டப்பாத்திகளில் நார்ப்பகுதி கீழ் இருக்குமாறும் கனமான மட்டைப்பகுதி மேல் இருக்குமாறும், உரிமட்டைகளை வைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 100-250 உரிமட்டைகள் தேவைப்படும். ஒரு காய்ந்த மட்டை அதன் எடையில் 3-5 சதவிகிதம் நீர்ப்பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த மட்டைகளின் கடினமான மேல் பகுதி நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தும். இம்மட்டைகள் 3-4 ஆண்டுகள் வரை அழிவில்லாமல் இருக்கும்.
மற்றொரு முறையில் இரு தென்னை வரிசைகளுக்கிடையில் அரை மீட்டர் ஆழம், அரை மீட்டர் அகலம் மற்றும் மூன்று மீட்டர் நீளம் கொண்ட குழிகளை ஏற்படுத்தி, அதில் தென்னை உரிமட்டைகளின் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்கும் வண்ணம் அடுக்கி அவற்றை மண்ணால் மூடிவிட வேண்டும். இதன் மூலம் பருவ காலங்களில் மண்ணில் உட்புகும் நீரை இரு தென்னை வரிசைகளுக்கிடையில் சேமித்து மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம்.
iii) தென்னை நார்க்கழிவு இடுதல்
ஒரு பாத்திக்கு 50 கிலோ என்ற அளவில் தென்னை நார்க்கழிவை இட்டு மூடி விடலாம். மக்கிய தென்னை நார்க்கழிவு உரத்தை இடுவதால் மண்ணின் பல்வேறு பௌதீக பண்புகளான மண்ணின் கட்டமைப்பு, பொலபொலப்புத் தன்மை மற்றும் நீர் பிடிப்புத் திறன் ஆகியவை மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
iv) வேளாண் கழிவுகள் பசுந்தாள் உரங்களைப் பரப்புதல்
வேளாண் பணிகளிலிருந்து கிடைக்கும் புல் மற்றும் களைகளையும் கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரங்களையும் ஒரு பாத்திக்கு 25 கிலோ என்ற அளவில் பரப்பி உயிர் மூடாக்கு அமைத்து மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம். இதனால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதோடு நல்லதொரு உரமாகவும் அமையும்.
v) அதிக அளவு சாம்பல் சத்து உரமிடல்
ஒரு பயிர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு இடர்பாடுகளான வறட்சி, பூச்சி – நோய் தாக்குதல் போன்றவற்றிலிருந்து பயிருக்கு தாங்கும் திறனை சாம்பல் சத்து அளிக்கின்றது. எனவே, பரிந்துரைக்கப்படும் சாம்பல் சத்து உரத்தை விட 50 சதவிகிதம் கூடுதலாக இட்டு, பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கும் திறனை அதிகரிக்கலாம்.
vi)வண்டல் மண் இடுதல்
பாத்திக்கு 150 கிலோ என்ற அளவில் ஆற்று வண்டல் மண்ணை பாத்திகளில் இடலாம். இதனால் மண்ணின் பௌதீகப் பண்புகள் மேம்பட்டு நீர் பிடிப்பு திறன் அதிகரிக்கிறது. வண்டல் மண்ணில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது.
vii) பசுந்தாள் உரங்களை பயிரிடுதல்
நீர் மிகுந்துள்ள நேரங்களில் பசுந்தாள் உரங்களான சணப்பை, தக்கைப் பூண்டு, கொள்ளு, கொளுஞ்சி ஆகியவற்றை தோப்புகளில் விதைத்து விட்டால் அவை உயிர் மூடாக்காகச் செயலாற்றி மண் வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்துகின்றன. மேலும், தேவையற்ற களைகளும் இதனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பசுந்தாள் உரங்களை 40-50 நாட்களில் மடக்கி உழுவதால் மண்ணின் நீர் பிடிப்புத் திறன் அதிகரித்து மண்வளம் மேம்படுத்தப்படுகிறது.
viii) வரப்பு ஓரங்களில் மரங்கள் நடுதல்
வரப்புகளின் ஓரப்பகுதிகளில் சவுக்கு, தேக்கு போன்ற மரங்களை நட்டும் செவ்வரளி, செம்பருத்தி போன்ற செடிகளை வைத்தும், மண்ணின் ஈரப்பதத்தை காக்கலாம். இவை உயிர் வேலியாக அமைவதோடு மட்டுமல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னந்தோப்புகளில் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகிறது. மண் அரிமானம் பெருமளவு தடுக்கப்பட்டு மேல் மண் அடுக்கின் ஈரமும் காக்கப்படுகிறது.
xi) பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
வயலின் தாழ்வான பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மழைக் காலங்களில் நீரை சேமிக்கலாம். இதனால் கிணறுகள் வறண்டு விடாமல் பாதுகாக்கப்படுவதுடன் இந்தக் குட்டைகளில் தேங்கியிருக்கும் நீர் வறட்சி காலங்களில் மிகவும் கைகொடுக்கும்.
x) இதர முறைகள்