June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழி முறைகள்

தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட சிவகங்கை, வேளாண்மை உதவி இயக்குநர், அ.வளர்மதி கீழ்கண்ட பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளார்.

சுருள் வெள்ளை ஈக்கள்:
வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞசள் நிற முட்டைகளை, சுழல்வடிவ அமைப்புகளில் ஒலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப்பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துக் கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஒலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்;படுத்தி வருகின்றன.

தாக்குதல் அறிகுறிகள்:
குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஒலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவ கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஒலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும்.
வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களை தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. தற்பொழுது இதன் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து கட்டுபடுத்திடலாம்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறைகள்:
மஞ்சள் நிறமானது வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் 11 ½ அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேலைகளில் 6 மணி முதல் 11 மணிவரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளின் முடடைகளை விடுதல் நல்ல பயனளிக்கும். மேலும் விபரங்கள் தெரிந்துக் கொள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Spread the love