June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்பு

சிவகங்கை, ஜூன் 21

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் தற்போதைய தட்ப வெப்ப நிலை காரணத்தால் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெள்ளை ஈக்கள் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றின் தேன் போன்ற கழிவினால் கரும்பூசனம் இலையின் அடிப்புறம் படர்ந்து கருமையாக காணப்படும். சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்வரும் முறைகளை கடைபிடிக்கலாம்.
தென்னை இலைகளின் அடிப்புறம் தண்ணீரை நன்றாக பீய்ச்சி அடிக்க வேண்டும்.

கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் வெள்ளை ஈக்களின் அனைத்து நிலைகளையும் நன்றாக உட்கொள்வதால் எக்டருக்கு 1000 எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புக்களில் விடவேண்டும். ஒரு லிட்டர் நீரில் 300 மிலி வேப்பஎண்ணெய் அல்லது 1 மிலி அசாடிராக்டின் மருந்தை ஓட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையில் அடிப்புறம் படுமாறு தெளிக்கவும். மஞ்சள் நிற ஓட்டும் பொரிகள் 6 அடி நீளம் 1.5 அடி அகலத்தில் தயார் செய்து 10 அடி உயரத்தில் ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில் ஆங்காங்கே கட்டி விடவேண்டும். மஞ்சள் நிற பூக்கும் தாவரங்களான சூரியகாந்தி, செவ்வந்தி பயிர்களை தென்னந்தோப்பில் வளர்த்து பூக்களால் கவரப்படும் இயற்கை எதிரி பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் எக்டருக்கு 1000 வீதம் 50 சதமானியத்தில் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் உதவி இயக்குனர் ரவிசங்கர் தெரிவித்தார்.

Spread the love