June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரங்களை வேர் வாடல் நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகள்

சிவகங்கை, ஜூன் 10

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில், தென்னை சாகுபடி விவசாயிகள் அதிகம் உள்ளார்கள். தென்னையில் வேர் வாடல் நோய் தாக்குவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகையால் வேர் வாடல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநர் அம்சவேணி, நிவர்த்தி செய்யும் முறைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

தென்னை மரம் பூலோக கற்பகவிருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, 6917.46 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு, சராசரியாக 14873 காய்கள் பெறப்படுகின்றன. தென்னையிலிருந்து வீட்டு உபயோகத்திற்கும் வணிகத்திற்கும் ஏற்ற பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றது. ஆகவே, தென்னை, விவசாயிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

தென்னை சமீபகாலமாக வேர் வாடல் நோய்த் தாக்குதலால் விளைச்சல் குறைந்து, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நோயின் தாக்கம் உலக அளவில் 38 சதவிகிதமும், தமிழ்நாட்டில் 50 சதவிகிதமும் காணப்படுகிறது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இந்நோய் வேகமாக பரவி வருகின்றது. இந்நோயால் மரங்கள் மடியாவிட்டாலும், மரங்கள் வாடி சோர்வடைவதால், காய்களின் எண்ணிக்கையும், தரமும் குறைந்து வருகின்றது. இது ஒரே திசையில் பரவக்கூடிய நோயல்ல. மூன்று ஆண்டுகளில் ஒன்று முதல் நான்கு கிலோ மீட்டர் வரை மட்டுமே பரவக்கூடியதாகும். இந்நோய் இளம் மரங்களில் ஏற்பட்டால் பூ உருவாவது தள்ளிப்போவதுடன் இலை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு காய்களின் எண்ணிக்கையும் குறைந்து விடும்.

நோய் காரணி மற்றும் நோய் கடத்தி
வேர் வாடல் நோய் கேன்டிடேட்ஸ் பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி மூலம் உண்டாகிறது. இது கண்ணாடி இறக்கை மற்றும் தத்துப்பூச்சி போன்றச் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்
இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். எவ்வித காரணமும் இன்றி அதிகமாக குரும்பை உதிர்தல் இதன் முதல் அறிகுறி ஆகும். பின்பு தென்னை மரத்தில் உள்ள மட்டைகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி இலைமடல்களின் ஓரங்கள் கருகி கீழ்நோக்கி வளைந்து காணப்படும். இலை மடல்களின் கருகிய பகுதிகள் அதிகமான காற்று அல்லது மழையின் போது மரத்திலிருந்து உதிர்ந்து விடுவதால் குச்சிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். இது மனிதனின் விலா எலும்பு போல காட்சியளிக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களில் அதிகமாகக் காணப்படும். மேலும், இலை அழுகல், குருத்துக் கருகுதல், பூங்கொத்து கருகல் மற்றும் வேர் அழுகுதல், மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல், நீர் மற்றும் தாது உப்புகள் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படுதல், எண்ணெய் சத்து குறைந்து காணப்படுதல் மற்றும் இலைப் பகுதியில் உள்ள திசுக்கள் சுருங்கி அதன் தடிமன் சிறியதாகக் காணப்படுதல் ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும்.

ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்
· இந்நோய் பிற மரங்களுக்கு பரவுதலை தவிர்க்க அதிகளவு நோயுற்ற மரங்களை அப்புறப்படுத்துதல் வேண்டும். நோய் தாங்கும் திறன் கொண்ட இரகங்களான மலேயன் பச்சை குட்டை, சௌகாட் பச்சை குட்டை மற்றும் சௌகாட் பச்சை குட்டை ஓ, மேற்கு கடற்கரை நெட்டை இவற்றை நடுதல்.
· வட்டப்பாத்திகளில் தென்னை மட்டைகளைக் கொண்டு நிலப்போர்வை அமைக்க வேண்டும்.
· சொட்டு நீர்ப்பாசன முறையைக் கையாள வேண்டும். வடிகால் வசதி அமைத்தல் இன்றியமையாததாகும்.
· தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு நீர் நிறைந்த பகுதியில் 65 லிட்டர் மற்றும் வறட்சி பகுதியில் 22 லிட்டர் என்ற அளவில் சொட்டு நீர்ப்பாசன முறையில் கொடுக்க வேண்டும்.
· கோடையில் மரம் ஒன்றிற்கு வாரத்திற்கு சுமார் 250 லிட்டர் தண்ணீர் வீதம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
· பசுந்தாள் உரங்களான தட்டைப்பயறு, சணப்பை, கலப்பகோணியம், பியூரேரியா மற்றும் தக்கைப்பூண்டு ஆகியவற்றை வட்டப்பாத்தி அல்லது தோப்புப் பகுதி முழுவதும் வளர்த்துப் பூக்கும் முன்னரே மடக்கி உழுதுவிட வேண்டும்.
· பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகளான தொழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ மெக்னீசியம் சல்பேட் 500 கிராம் ஆகியவற்றை வருடத்திற்கு இருமுறை ஒரு மரத்திற்கு பிரித்து இட வேண்டும்.
· இருநூறு கிராம் நுண்ணுயிரி கலவை (டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம் மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம்), தொழு உரம் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து மூன்று மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை மண்ணில் இட வேண்டும். மேலும், இக்கலவையை இட்ட பின் ஒரு மாதம் கழித்து ஒரு மரத்திற்கு 75 கிராம் காப்பர் சல்பேட் இட வேண்டும்.
· உயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போபாக்டீரியா 50 கிராம் மற்றும் வேர் உட்பூசணம் 50 கிராம் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலந்து வருடத்திற்கு இருமுறை ஒரு மரத்திற்கு பிரித்து இட வேண்டும்.
· தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்த ஆண்டிற்கு இருமுறை வேரில் கட்ட வேண்டும். இதனால் தென்னையின் விளைச்சல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
· நோய்க்காரணியைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான கண்ணாடி இறக்கை மற்றும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு 250 கிராம்இ 200 கிராம் மணல் அல்லது ஃபிப்ரோனில் 0.3 ஜியை மணலுடன் 1:1 என்ற விகிதத்தில் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.
· டைமீதோயோட் 1.5 மி.லிஃலிட்டர் மருந்தை ஒரு மில்லி ஒட்டுத்திரவத்துடன் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
· இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த இரண்டு மில்லி ஹெக்ஸகோனசோல் (அல்லது) மூன்று கிராம் மேன்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 300 மிலி கலவையைக் குருத்தில் ஊற்ற வேண்டும்.
· தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கோகோகான் தாய் நுண்ணுயிரி கலவையிலிருந்து பெருக்கம் செய்யப்பட்ட நுண்ணுயிரிக் கலவை ஒரு லிட்டர் எடுத்து 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். இம்முறையை மாதம் ஒரு முறை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இத்தகைய ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை தென்னையில் அனைத்து விவசாயப் பெருமக்களும் பின்பற்றினால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் தென்னை மரங்களில் வேர் வாடல் நோய் கட்டுக்குள்ளாகிறது என்பதை பற்றி விரிவாக வேளாண்மை உதவி இயக்குநர் எடுத்து கூறினார். அப்போது அட்மா திட்ட அலுவலர்கள் பெ.ஸ்ரீரங்கசெல்வி மற்றும் கோபாலகிருஷணன் ஆகியோர் வேர் வாடல் நோய் பற்றியும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினர்.

Spread the love