கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயிகள் பருவ நிலை மாற்றம் (Climate Change) சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் (Price fluctuation) மற்றும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் உற்பத்தி இழப்புகள் மற்றும் மறுபுறம் வேளாண் சந்தைகளில் போதிய விலை கிடைக்காத சூழலில் தென்னை விவசாயிகளின் வருமானம் குறைந்து வருகிறது. மறுபுறம் வேளாண் இடுபொருட்களின் தொடர் விலை உயர்வுகள் தொழிலாளர்கள் கூலி உயர்வுகளும் தென்னை விவசாயத்தில் உற்பத்தி செலவுகளை (Production Costs) வெகுவாக உயர்த்திவிட்டது. இத்தகைய நடைமுறைச் சூழலில் தென்னை விவசாயிகள் அதிக வருமானம் மற்றும் லாபம் பெறும் வண்ணம் தென்னை நார் கழிவுகளை கொண்டு உருவாக்கப்படும் காயர் வித் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்தியாவின் தென்னை காயர் வித் விரும்பி வாங்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வருட ஏழு மாத காலத்தில் மட்டும் ஏற்றுமதிகளில் சாதனை படைத்துள்ளது. தற்போதைய ஏப்ரல் முதல் அக்டோபர் காலகட்டத்தில் 4 லட்சம் டன்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு சுமார் 1204 கோடிகள் அளவிற்கு வணிகம் நடந்துள்ளது. இது கடந்த காலகட்டத்தில் நடந்த 978 கோடிகள் வணிகத்தை விடவும் மிகவும் அதிகம். குறிப்பாக மேலை நாடுகளில் மண் இல்லாமல் மேற்கொள்ளப்படும் அலங்கார செடிகள் வளர்ப்பு, கொரோனா தொற்று காலங்களில் அதிகப்படியான வீட்டு தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுவதால் இந்தியாவின் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்தூரியம் மற்றும் ஆர்க்கிட் மலர்களை வீடுகளில் வளர்க்க அதிகளவில் பயன்படுத்தப்படும் தென்னை காயர் வித் தற்போது நமது நாட்டில் இருந்து சீனாவிற்கும் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை வாரியத்தின் புள்ளி விபரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 முதல் 22 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதியில் கண்டுள்ளது.
சீனாவிற்கு மட்டும் சுமார் இரண்டு லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 365 கோடிகள் மதிப்பில் வணிகம் நடந்துள்ளது. மேலை நாடுகளில் குளிர் காலங்களில் கால் மிதியாக பயன்படுத்தப்படும் தென்னை கொண்டு தயார் செய்யப்படும் கால் மிதிகள் (Door Mat) ஏற்றுமதியும் பெருகி வருகிறது. தற்போது கேரளா மாநிலத்தைவிட தமிழகத்தில் அதிகளவு குறைந்த விலையில் தென்னை நார் கழிவுகள் கிடைப்பதும் குறைந்த தொழிலாளர் கூலி காரணமாக அதிகளவு ஏற்றுமதிகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது.
சர்வதேச சந்தைகளில் ஏற்படும் இத்தகைய புதியபோக்குகள் (New Trends) தமிழக தென்னை விவசாயிகளுக்கு அதிகளவு தொழில் தருவதாக உள்ளது. மேலும் தென்னை நார் கழிவுகளை கொண்டு உருவாக்கப்படும் புதிய ஜவுளி (Textiles) வெற்றி பெறும்போது மேலும் தென்னை விவசாயிகளுக்கு அதிகளவு பயன்பெற்று தருவதாக இருக்கும்.
கட்டுரை : முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.