சென்னை, மே 20
தென் மேற்கு பருவமழை இன்று (21) அந்தமானில் துவங்க உள்ளது. இதையொட்டி, வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாடு முழுதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அதேநேரம், நாட்டின் முக்கிய மழை பருவமான தென் மேற்கு பருவமழை, இன்று துவங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த வாரத்தில் இருந்தே, தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீச துவங்கியுள்ளது. பருவ காற்றின் தீவிரத்தால், அரபி கடலில், ‘டாக்டே’ என்ற புயல் உருவாகி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கனமழையையும், சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தென் மேற்கு பருவமழை, இன்று அந்தமானில் துவங்கும். இதையொட்டி, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த புயல் கரை கடந்த பின், கேரளா மற்றும் தமிழகத்தில் வரும், 31ம் தேதி பருவமழை துவங்கலாம் என்றும், வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது : வெள்ளிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும், 22, 23ம் தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.