September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்

கடலூர், செப்.13

விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக அண்மையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இ-ஷ்ரம் என்ற இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஏறத்தாழ 43 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். சமூக பாதுகாப்பு திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதை இந்த தரவுத்தளம் உறுதிப்படுத்தும்.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மீன் பிடிப்போர், தேனீ வளர்ப்போர், ஆடு, மாடு வளர்ப்போர், உப்பளத்தில் வேலை செய்வோர் மற்றும் கட்டட தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களாக கருதப்பட்டு ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தின் மூலம் பயனடைவார்கள். இதே போன்று 156 வேலை இயல்புகள் இணையதளத்தில் உள்ளது. தகுதியானதை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணுடன் இணைத்த கைபேசி எண் மற்றும் வங்கி விவரங்களை பதிவிட வேண்டும். அவர்களுக்கு நிரந்தர 12 இலக்க தனித்துவ குறியீட்டு எண் வழங்கப்படும். இது ஒரு கட்டணமில்லா சேவை என்பது குறிப்பிடத்தக்கது. பொது சேவை மையத்தில் அல்லது தாங்களாகவே பதிவு செய்யலாம்.

மேலை நாடுகளிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் ஏழைகளுக்கு இது போல சமூக பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அவர்கள் அனைவர்க்கும் ஒருவர் விடாமல் உதவித்தொகை வழங்குவதற்கு அது மிகவும் பயன்பட்டது. அதே முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தான் ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தின் நோக்கம்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைத்து சமூக நலத்திட்டங்களையும் பெற முடியும் என்பதுடன், விபத்து காப்பீடாக ரூபாய் 2 லட்சம் பெறுவார்கள்.

மேலும் இந்த தரவுத்தளம் மூலம் சமூக நலத்திட்டங்கள் உரிய தொழிலாளர்களுக்கு சென்று சேர வழிவகை செய்யும்.

தகவல் : பாலாஜி.க (இளநிலை வேளாண்மை – 4ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்) Ph. no. 63694 51360.

Spread the love