புது தில்லி, மே 4
கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின், தளர்வான மற்றும் விரைவுப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்டப் பணி இம்மாதம் 1-ந் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது. நமது நாட்டில் செலுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 15.89 கோடியைக் கடந்தது.
12 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த, 18 வயது முதல் 44 வயது வரையிலான 4,06,339 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2,744 பேர் பயனடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை 23,35,822 அமர்வுகளில், மொத்தம் 15,89,32,921 நபர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட மொத்த பயனாளிகளில் 66.94 சதவீதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தடுப்பூசி செலுத்த தொடங்கிய 108-வது நாளான திங்கள்கிழமை 17,08,390 பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை, 1,66,13,392 ஆக உள்ளது. நமது நாட்டின் குணமடையும் விகிதம் 81.91 விழுக்காடாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,20,289 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில் 73.14 சதவீதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தினசரி தொற்றுப் பாதிப்பு விகிதம் தற்போது 21.47 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் கொவிட் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71.71 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உ.பி., தில்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தினசரி தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் (48,621 பேர்), அடுத்த இடத்தில் கர்நாடகாவும் (44,438 பேர்), 3 ஆம் இடத்தில் உ.பி.யும் (29,052 பேர்) உள்ளன.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 34,47,133 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் கொவிட் தொற்றால் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவிலும் (567), தில்லியிலும் (448), உ.பி.யிலும் (285) தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர்ஹவேலி மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றால் யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.