January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேசிய உழவர் தின சிறப்பு நிகழ்ச்சி

இயற்கை வேளாண்மை இடுபொருள் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்

சேலம், டிச.23

சேலம் மாவட்டம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய உழவர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, இயற்கை வேளாண்மை இடுபொருள் உற்பத்தி குறித்த கருத்தரங்கம் 23.12.2021 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. ஜெகதாம்பாள், துவங்கி வைத்து தலைமை உரையாற்றி, இயற்கை விவசாயத்தின் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களை பற்றி எடுத்துரைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்கை வேளாண்மையில் முன்னோடியாக உள்ள விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் பசுந்தாள், பசுந்தழை உரமிடல், பயிற்சுழற்சி, பண்ணை கழிவுகளை சத்து மிகுந்த உரமாக்குதல், தென்னை நார் கழிவை மக்க வைத்தல், கோழிப் பண்ணை கழிவை எருவாக்குதல், மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி, நோய் மேலாண்மை, சிறப்பு அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வழி வேளாண்மை சார்ந்த தொழில் நுட்ப உரைகள் வழங்கபட்டன. மேலும் பஞ்சகாவ்வியம் தயாரித்தல், வேம் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல், வெர்மி வாஷ் உற்பத்தி, பாக்டிரியா மற்றும் பூஞ்சாண உயிர் எதிர்க் கொல்லிகள் தயாரித்தல், உயிரியியல் முறையில் விதை நேர்த்தி செய்தல், வீட்டுக்கழிவை உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் சிறந்து விளக்கும் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போற்றி கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் இக்கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடைத்தனர்.

Spread the love