August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க மானாவாரி வேளாண்மை பயிற்சி

சிவகங்கை, மே 19

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் அட்மா-விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சு.அழகுராஜா, வேளாண்மை உதவி இயக்குநர், கல்லல் தலைமையில் 40 விவசாயிகளுக்கு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க “மானாவாரி வேளாண்மை” பற்றிய பயிற்சி கல்லுப்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா கூறுகையில் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் கல்லல் வட்டாரத்தில் அதிகப் பரப்புகளில் மானாவாரி முறையில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மானாவாரி சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் முறைகளையும் சாகுபடி தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் எளிதில் கற்றுக் கொள்ளும் விதத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண்மை பற்றி பேசுகையில் மழைப் பொழிவின் மூலம் பெறப்படும் நீரில் 60 முதல் 75 சதவீதம் வரை நீராவியாதலின் மூலம் இழக்கப்படுகிறது. இந்த நீராவியாதல் இழப்புகளை நில போர்வை அமைத்து எவ்வாறு குறைக்கலாமென்றும் மழை நீர் சேகரிப்பு பண்ணைக் குட்டையின் முக்கியத்துவம், நுண்ணீர் பாசனத்தின் அவசியம், களைக் கட்டுப்பாடு, மானாவாரி விவசாயத்துக்கேற்ற பண்ணைக் கருவிகள் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களான கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார்.

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் உதவி பேராசிரியர் செல்லத்துரை மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற பயிர்கள் இரகங்கள் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் பற்றி மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி பற்றிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் அ.சூர்யா மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் மண் பரிசோதனைக்கு மண் சேகரிக்கும் முறைகள் மற்றும் கோடை உழவு பற்றியும் கூறினார். உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் நா.குருதாஸ் மற்றும் த.அருண்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love