திருச்சி, மார்ச் 29
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்கள் சாந்தகுமார், சங்கமன், சதீஸ்குமார், சக்தி தங்கவேல், தமிழரசன், வீரமணிகண்டன், சசிகாந்த், வின்சென்ட், சூர்யா, வசந்த், சங்கல்ப் ஆகியோர் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.
முதலாவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் மூத்த தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ரவிசாமி, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அவர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி 1993 ஆகஸ்ட் 21ம் தேதி திருச்சி தாயனுர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் துவக்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த மையம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய குறிப்பிட ஆராய்ச்சிகளை இன்றளவும் செய்து வருகிறது. அவை பயிர் மேம்படுத்துதல் பிரிவு, பயிர் பெருக்கம் பிரிவு, பயிர் காப்பியல் பிரிவு மற்றும் அறுவடை செய்த பின் மேம்பாடுகள். இந்த ஆராய்ச்சி மையம் நன்கு மேம்படுத்தபட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒரு சில ஆய்வகங்களான திசு வளர்ப்பு ஆய்வகம், உயிர் தொழில் நுட்பவியல் ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம், பூச்சியியல் ஆய்வகம், நூற்புழு ஆய்வகம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா சம்பந்தபட்ட ஆய்வகம் போன்றவை அடங்கும். இந்த மையம் வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி” என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற நுண் சத்துக்களும் நிறைந்துள்ளன என விவரித்தார். அடுத்தாக வாழையில் அறுவடைக்கு பின் தொழில்நுட்ப முறை பற்றி காமராஜ் விளக்கினார். அவர் வாழைக்காய், வாழைப்பழத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வாழைத்தாரை வெட்டிய பின்னரும் அதன் இலை, நார்கள், தண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் முறையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இறுதியாக அம்மையத்தின் ஆராய்ச்சி மாணவர் நெல்சன் அங்குள்ள இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் செயல்பாட்டினை குறித்து விவரித்தார்.
Spread the love