June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொடர் மழை, காற்றால் வாழைகள் முறிந்து விழுந்து சேதம்

ஊட்டி, மே 18

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சூறாவளி காற்றுடன் தொடர் கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர்வயல், கம்மாத்தி, மண்வயல், முதுமலை, பாடந்தொரை, தேவர்சோலை, புளியம்பாரா உள்பட பல இடங்களில் காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் வாழைகள் சேதமானது. மேலும் கூடலூர் பகுதியில் பாகற்காய், மேரக்காய், தட்டை பயிறு உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை மழை செய்வது வழக்கம். கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் கோடை மழை சரிவர பெய்யவில்லை. இருப்பினும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், மேரக்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

ஆனால் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால், கோடை கால பயிர்கள் சேதம் அடைந்து விட்டது. பாகற்காய் பயிர் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மேலும் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பந்தலூரில் அதிக மழை பொழிவு பதிவாகி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக முகாம்களுக்கு வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Spread the love