புது தில்லி, மே 15
தொலைதொடர்பு நிறுவனங்கள், அவற்றின் கட்டணங்களுக்கான நாட்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக நுகர்வோரிடமிருந்து புகார்கள் வருவதை அடுத்து, ‘டிராய் இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
இந்நிலையில், இது குறித்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய டிராய் முன்வந்து உள்ளது. பங்குதாரர்கள், பொதுமக்கள், துறையினர் ஆகியோர் தங்கள் கருத்து களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது குறித்து டிராய் தெரிவித்துள்ளதாவது: தொலைதொடர்பு நிறுவனங்களின் சில வகை கட்டணங்கள் குறித்து நுகர்வோர் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நுகர்வோருடைய தேவையை திருப்திபடுத்தும் வகையில், கட்டண விபரங்களை அமைக்க டிராய் விரும்புகிறது.சேவையை பயன்படுத்திய பின், கட்டணம் செலுத்தும், ‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது 28, 29, 30 அல்லது 31 நாட்களாக இருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும் மாதாந்திரத்துக்கு, 28 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு, 12 முறைக்கு பதிலாக, 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியதிருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் கட்டணங்களை, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் என எடுத்துக் கொள்ள இருக்கிறதா அல்லது தனித்தனியாக, 28, 29, 30, 31 நாட்களுக்கு வழங்க இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, இது குறித்த கருத்துகளை, நிறுவனங்கள் ஜூன் 11ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதன் மீதான மாற்றுக் கருத்துகளை, ஜூன் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.