September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொழில்துறை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சென்னை, செப்.14

தொழில்துறை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் சிஐஐ, வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் கொரோனா தொற்று காலத்தில் தொழில்துறை சந்தித்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் என்று மத்திய அரசு நம்பிக்கை வைத்திருந்தது. தற்போது, அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த நம்பிக்கை மத்திய அரசின் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கிறது என்றார். கொரோனா நோய்த்தொற்று நிலைமை காரணமாக, தொழில்துறையினருடன் நடக்கும் உரையாடல்கள் மத்திய அரசுக்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க உதவியதாக இருக்கிறது.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி கிடைக்கவில்லை என கடந்தமுறை புகார் வந்தது. தற்போது, அது தொடர்பாக எந்த குறையும் வரவில்லை என்பது வரவேற்கத்தக்கது. கடன்களுக்கான வட்டிக் குறைப்பு மற்றும் நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகை தொடர்பாக, அடுத்த நிதிநிலை அறிக்கை வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நிறுவனங்களுக்கு எப்போது எது தேவையோ அவை உடனடியாக செய்து தரப்படும் என்றார்.

மேலும், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக, தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் அதேவேளையில் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை தனியார் துறை ஆதரவுடன், மத்திய அரசு செய்து வருகிறது என்றார்.

Spread the love