January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவு

கன்னியாகுமரி, மே 8

கடைகள் அடைப்பு, விழாக்கள் ரத்து போன்ற காரணங்களால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை உள்ளது. இச்சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், திருநெல்வேலி மாவட்டம், பழவூர், ஆவரைகுளம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து அரளிப்பூ, பெங்களூரு, ஓசூரிலிருந்து பட்டன் ரோஸ் மற்றும் மஞ்சள் கேந்தி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் ஆகிய இடங்களிலிருந்து அரளி, கோழிக்கொண்டை, ரோஜா ஆகிய பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மேலும், சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலகுண்டு, கொடைரோடு, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும், தென்காசி, புளியங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து துளசி மற்றும் பச்சிலை ஆகியனவும் கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இச்சந்தைக்கு பல மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் பூ வியாபாரிகள் வந்து பூக்களை அதிகளவில் வாங்கிச் செல்வர். இதனால், கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாள்கள், சுபமுகூர்த்த நாள்களில் பூச் சந்தையில் வியாபாரம் களை கட்டும். இந்த நேரங்களில் பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் மூலம் பூக்களை வாங்கிச் செல்வர்.

இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக பூக்கள் விற்பனை அடியோடு சரிந்துள்ளது. அரசின் புதிய கட்டுப்பாடுகளின்படி மே 6ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணிக்கு பூக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன.

பூக்கள் அழுகும் தன்மை கொண்டது என்பதால், அதை செடியில் பறிக்காமல் அப்படியே விடவும் முடியாது. அவ்வாறு பறித்து விற்பனைக்கு அனுப்பும் பூக்களை சந்தையில் வாங்க ஆளில்லை. இதனால் பூக்கள் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது.

இதுகுறித்து தோவாளை பூச்சந்தை மொத்த வியாபாரி ஒருவர் கூறிதாவது : கரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு முழுவதுமே முக்கிய பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறாததால், பூ வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

பின்னர் சில நாள்கள் கரோனா குறைந்திருந்ததால் மீண்டும் வியாபாரம் இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த போது, கரோனா 2ஆவது அலை பரவல் காரணமாக எந்த விழாவும் நடைபெறாததால், வியாபாரிகளும், விவசாயிகளும் மீண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் அவர்.

Spread the love