June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நகர்ப் புற வீடுகளுக்கான சில தோட்டக்கலை தொழில் நுட்பங்கள்

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்தவரை தோட்டக்கலை என்பது ஓய்வில் செய்யக்கூடிய ஒரு பொழுது போக்காகும். சில நேரம் ஈடுபாட்டையும் தாண்டி உயிராக அதன் மீது நாட்டம் கொண்டுள்ளனர் சிலர். நீங்கள் உண்ணுவதற்கு ஆரோக்கியமான காய்கள் மற்றும் பழங்களை கூட வளர்க்கலாம். ஆனால் நகர்ப்புற வீடு என்றால் அவைகளில் சில வேற்றுமைகள் இருக்கும். சிலபேரின் வீட்டில் தோட்டத்திற்கென தனி முற்றம் என்பதே இருப்பதில்லை.
உங்களுக்கு இந்த கலையின் மீது ஆர்வம் இருந்தும் கூட வீட்டில் இடம் இல்லாத போது ஏமாற்றம் அடைவார்கள் சிலர். நீங்கள் செடி வளர்ப்பில் மிகுந்த பிரியமுள்ளவர்களாக இருந்தால் இயற்கை முறையில் காய்கறிகளை வளர்க்க விரும்புபவர்களாக இருந்தால் இந்த பகுதி முற்றிலும் உங்களுக்கு தான்!

குளிர் காலம் முடிந்து வெயில் வெளீரென்று வரும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்கான காய்கறி தோட்டத்தை நீங்களே உருவாக்குங்கள். ஆனால் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு பெரிய இடம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது தவறான எண்ணமாகும். வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கு பெரிய இடம் ஏதும் தேவைப்படாது. பெரிய இடங்கள் இருக்க வேண்டும்
என்பதன் அவசியமும் கிடையாது. திட்டமிட வேண்டியது அவசியம். மிக முக்கியமான குறிப்பு என்ன தெரியுமா? இந்த வேலையை செய்ய நினைப்பவர்கள் முன்பாகவே யோசித்து திட்டம் தீட்டி வைத்திருக்க வேண்டியது அவசியம். எங்கு இதை அமைப்பது என்பதையும், விதைகள் மற்றும் உரம் ஆகியவற்றை தயார் நிலையில் வாங்கி வைப்பதும் திட்டத்தில் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதற்காக தினமும் எவ்வளவு நேரத்தை செலவு செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு பின்னர் அதற்கேற்ப பயிரிட வேண்டும்.

இது இயற்கையான முறையில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஒரு முக்கிய குறிப்பாகும்.

மாடித் தோட்டத்தில் கீரைச் செடியை எப்படி வளர்க்கலாம்?
முதலில் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஒரு நல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டிற்கு இரண்டடி நீள அகல வீதம், அரையடி உயரமுடைய ஒரு தொட்டி போல் அமைக்க வேண்டும்.
இத்தொட்டியில் தான் நாம் கீரை செடிகளை பயிர் செய்யப் போகிறோம். எந்த கீரை எதற்கு நல்லது தெரியுமா? நமது தேவைக்கேற்ப விதவிதமான கீரைகளான, சிறு கீரை, தண்டுக் கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக்கீரை மற்றும் அரைக்கீரை போன்ற கீரை வகைகளை நாம் பயிரிடலாம்.

கீரை வளர்ப்பிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் கரைசல் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இக்கரைசலுக்கு தேவையான பொருட்கள், ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழம், ஒரு கிலோ கிராம் பரங்கிப் பழம், ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப்பழம், பிறகு ஒரு நாட்டுக் கோழி முட்டை மற்றும் ஒரு கிலோ கிராம் உருண்டை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை. முதலில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு பேரலை (barrel) எடுத்துக் கொள்ளவும். பேரல் பிளாஸ்டிக்கில் இருப்பது நலம். பிறகு பப்பாளிப் பழம், பரங்கிப் பழம், கனிந்த நாட்டு வாழைப் பழம் எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருண்டை வெல்லத்தையோ அல்லது நாட்டு சக்கரையையோ பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் எடுத்து வைத்திருக்கும் பேரலில் மூன்று பழங்களின் நறுக்கிய துண்டுகளை போடவும். அதன் பின் உருண்டை வெல்லப் பொடியையோ அல்லது நாட்டு சக்கரைப் பொடியையோ அதில் போடவும். நாம் எடுத்து வைத்திருக்கும் நாட்டு முட்டையை ஓட்டுடன் சேர்த்து உடைத்து அதில் போட வேண்டும். அதன் பின் இந்தக் கரைசல் நன்கு ஊறும் அளவிற்கு நிறைய தண்ணீரை ஊற்றவும். பிறகு அந்த பேரலை நன்கு மூடி விட வேண்டும். அந்த பேரலை எப்போதும் நிழல் இருக்கும் ஓர் இடத்தில் ஓரமாக வைத்து விடவேண்டும். ஒரு மாதம் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் அந்த கரைசலில் மீது வெள்ளை நிற படலம் உருவாகி இருப்பதைக் காணலாம். அதுவே அந்த கரைசல் நன்றாக உருவாகி இருப்பதற்கான அறிகுறி. இப்போது நாம் கரைசலை உருவாக்கி விட்டோம்.

இந்தக் கரைசல் நீரில் கலந்து மண்ணில் ஊற்றுவதால் நாம் வளர்க்கப் போகும் செடிகளுக்கு, அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் நுண்ணுயிர்களின் அளவை பெருக்கச் செய்யும் ஆற்றல் கிடைக்கும். மேலும் இது செடிகளுக்கு தேவையான அடிப்படைச் சத்துக்களை அதிகமாக தரக்கூடியது. நமக்கு தேவையான கரைசலை 100 மில்லி லிட்டர் எடுத்து 3 லிட்டர் நீரில் கலந்து கரைசல் நீரை தனியே வைத்துக் கொள்வோம்.

  1. முதலில், தொட்டியின் உயரத்தில் பாதி அளவு உயரத்திற்கு மணலைக் கொட்டி வைக்க வேண்டும்.
  2. பிறகு மணல் ஈரமாகும் வரை கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.
  3. பிறகு மணலுடன் கீரைகளின் விதைகளைக் கலந்து நாம் அமைத்து வைத்த தொட்டியில் மணல் மீது படர்வது போல் தூவ வேண்டும்.
  4. பிறகு மணலை வைத்து மேலே போட்டு மூட வேண்டும்.
  5. பிறகு அதன் மீது கரைசல் நீரை மீண்டும் தெளிக்க வேண்டும்.
  6. மூன்றாம் நாளில் மீண்டும் நீர் தெளிக்க வேண்டும்.
  7. இப்போது கீரைகள் முளைக்க 7-10 நாட்கள் ஆகும்.
  8. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரப்பதம் பொறுத்து கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.
  9. நடுவில் முளைக்கும் களைகளை வெட்டி எரிய வேண்டும். தேவையற்ற இவை கீரைகளை செல்லும் கரைசல் நீரையும், சத்துக்களையும் உறிந்து கொண்டு கீரைகளுக்கு சேர வேண்டிய சக்திகளை வீணடித்து விடும்.
  10. நான்கு முதல் ஐந்து வாரத்திற்குள் கீரை நன்கு வளர்ந்து நாம் உபயோகப்படுத்துவதற்கு தயாராகி விடும்.
  11. பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகிய வகைகள் முதல் அறுவடை செய்த பின்னும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நாம் எதுவும் செய்யாமலேயே மீண்டும் அறுவடைக்கு தயாராகும். ஒரு வருடத்திற்கு பிறகு நாம் மீண்டும் முதலில் இருந்து விதைதூவி வளர்க்க வேண்டும்.
  12. தண்டுக் கீரையும், வெந்தயக் கீரையும் ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் மீண்டும் முதலில் இருந்து விதைதூவி வளர்க்க வேண்டும்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த கீரைகளை சுவைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் !

தகவல் : ப.அருள் அரசு, மு.பழனிக்குமார், மு.ஆனந்தன் மற்றும் சு.குமார், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

Spread the love