எர்னஸ்ட் & யங் இந்தியா தகவல்
புது தில்லி, ஏப்.22
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளதாக எர்னஸ்ட் & யங் இந்தியா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் மூன்று மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி 250 கோடி டாலரை திரட்டியுள்ளன என தெரிவித்துள்ளது.
அதிலும், எஸ்எம்இ பிரிவில் 5 நிறுவனங்கள் இந்த புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்று கணிசமான அளவிலான தொகையை திரட்டியுள்ளன. மேலும், நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டியதில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேசன் மிக முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி அதிகபட்ச அளவாக 63.4 கோடி டாலரை திரட்டிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் நடைபெற்ற புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை கடந்த 2020 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 1,600 சதமும், நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 70 சதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐபிஓ நடவடிக்கைகளில் முதல் காலாண்டில் காணப்பட்ட எழுச்சி நடப்பு இரண்டாவது காலாண்டிலும் தொடர அதிக வாய்ப்புள்ளது என எர்னஸ்ட் & யங் இந்தியா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.