மும்பை, டிச.24
நடப்பாண்டில், சந்தையில் இதுவரை 63 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, ரூ.1.18 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து பிரைம் டேட்டாபேஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.
இதுவரை இல்லாத வகையில், மிக அதிகபட்சமாக, நடப்பாண்டில் மட்டும், இதுவரை 63 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக இவை மொத்தம் ரூ.1.18 லட்சம் கோடியை திரட்டி உள்ளன. கடந்த ஆண்டில் 15 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்து, ரூ.27 ஆயிரம் கோடியை திரட்டின. நடப்பாண்டு பங்கு வெளியீட்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சில்லரை விற்பனை நிறுவனங்கள் ஆகியவை முக்கிய இடம் வகித்துள்ளன. அத்துடன், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விசயமாகும்.
மேலும், பட்டியலிடப்பட்ட நாளின் முடிவு விலையை வைத்து பார்க்கும்போது, 34 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் 10 சதத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டி தந்துஉள்ளன. இந்த போக்கு மேலும் அதிகரிக்கும். தற்சமயம் 35 நிறுவனங்கள் பங்குவெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை செபியிடம் வாங்கி வைத்துள்ளன. மேலும் 33 நிறுவனங்கள் அனுமதி பெறுவதற்காக, செபிக்கு விண்ணப்பித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.