நாகப்பட்டினம், ஆக. 3
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழையூர் வட்டாரத்தில் உள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் திருக்குவளை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆர்.சுதா, 2.8.22 அன்று தரமான விதை உற்பத்தி செய்வது பற்றியும், இயற்கை வேளாண்மை செய்வது பற்றியும் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், விதைப்பண்ணை பதிவு செய்வது முதல், கலவன்கள் நீக்குவது, பயிர் விலகு தூரம் பராமரிப்பது, வயலாய்வு, சுத்தி அறிக்கை வழங்குதல், விதை சுத்திகரிப்பு செய்தல், விதை மாதிரி எடுத்தல், இறுதியில் பகுப்பாய்வில் தேறிய விதைக்குவியலுக்கு சான்றட்டை கட்டுதல் வரை விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், அங்கக வேளாண்மை குறித்தும், அங்கக பண்ணை பதிவு செய்து சான்றிதழ் பெறுவது குறித்தும் விரிவாக கூறினார். நாகப்பட்டினம், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்), அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பங்கினை எடுத்துரைத்தார்.