August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பாண்டில் புதிய உச்சத்தை தொடும்: இபிசிஎச்

புது தில்லி, ஜூலை 22

நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் புதிய உச்ச அளவு வளர்ச்சியை எட்டும் என கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஎச்) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் ராஜ் குமார் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளதாவது: இந்திய கைவினைப் பொருள்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், அங்கிருந்து கிடைக்கும் ஆர்டர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நடப்பு 2021-22ம் நிதியாண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 10-15 சத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, முன்னெப்போதும் இல்லாத சாதனை வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 3,447.71 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,259.34 கோடியாக மட்டுமே காணப்பட்டது. இருப்பினும், கொரோனா மூன்றாவது அலை உருவாகும்பட்சத்தில் அதன் தாக்கம் நடப்பாண்டுக்கான வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க இயலாது.

கைவினைப் பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு எம்இஐஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதி பெரும் உதவியாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள புதிய வாடிக்கையாளர்களை கண்டறிய இணையதள வணிகம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இதனால், சர்வதேச அளவில் கைவினைப் பொருள்களுக்கான தேவை பெருகும். எனவே, இணைய வணிகம் தொடர்பாக வகுக்கப்படும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love