கலிபோர்னியா, ஏப்.27
கடுமையான கோவிட் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவுவதாக கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சையும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெல்லாவும் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு உதவுவதற்காக ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கிறது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், ஆக்சிஜன் உபகரணங்களை இந்தியா வாங்குவதற்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்களும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.
இதுகுறித்து கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
“இந்தியாவில் கோவிட் பாதிப்பு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளிலிருந்து இந்தியா மீண்டு வரும் வகையில் மருத்துவ உதவிகளுக்காகவும், நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு உதவவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “கிவ் இந்தியா’ மற்றும் யுனிசெஃப் அமைப்புகளுக்கு கூகுள் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் சார்பில் ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெல்லா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதுபோல, மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உபகரணங்களை இந்தியா வாங்குவதற்கு உதவிகளை அளிக்கும். மேலும், நிவாரண உதவிகளை அளிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியிலும் இந்தியாவுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.