புது தில்லி, ஏப்.22
நாட்டின் கோவிட் தொற்றின் 2வது அலை கோர தாண்டவத்தால் மீண்டும், சானிடைசர் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்திருப்பதாக, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்த விரிவான செய்தியாவது: நாடு முழுவரும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கைகழுவும் சோப்புகள், கிருமிநாசினிகள், கிருமியிலிருந்து பாதுகாக்க தேவையான தரையை சுத்தப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல் அலையின் போது தேவைகள் அதிகரித்து, கடுமையான தட்டுப்பாடு நிலவியது. இதற்கு, நாடுதழுவிய பொது முடக்கம் உத்தரவு காரணமாக அமைந்தது. பொது முடக்க உத்தரவுகளால், வினியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் பிறகு நிலைமை சரியானது. தொற்றும் குறைய ஆரம்பிக்கவும், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இத்தகைய பொருட்கள்நுகர்வில் தேவை குறையத் துவங்கியது.
இந்நிலையில், இப்போது இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் தேவை அதிகரித்துள்ளது. இம்முறை வினியோகம் மற்றும் தயாரிப்பில் எந்த சிக்கல்களும் இல்லாமல், தேவைகளை நிறைவேற்ற முடியும் என ஐடிசி, எச்யுஎல், ஹிமாலயா, பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.