புது தில்லி, ஏப்.22
கோவிட் தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிற நிலையில் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசண் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
146 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு விகிதம் 15 சதத்துக்கு அதிகமாக இருப்பதாகவும், 274 மாவட்டங்கள் 5 முதல் 15 சத பாதிப்பு விகிதத்தை கொண்டிருப்பதாகவும் காட்டுகின்றன என தெவித்தார்.
மேலும், 10 வயதுக்கு குறைவானோர் 4.03 சதத்தினர் முதல் அலையில் பாதிப்புக்குள்ளானதாகவும், இரண்டாவது அலையில் இந்த விகிதம் 2.97 சதமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
முதல் அலையில் 10 முதல் 20 வயதினரில் 8.07 சதம் பாதிப்புக்குள்ளானதாகவும், இது இரண்டாவது அலையில் 8.50 சதமாக பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
20-30 வயதினரில் முதல் அலையில் 20.41 சதத்தினரும், இரண்டாவது அலையில் 19.35 சதத்தினரும் பாதிப்புக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் முதல் அலையின்போது பாதிப்பு 67.5 சதம் எனவும், இரண்டாவது அலையில் பாதிப்பு 69.18 சதம் எனவும் அவர் தெரிவித்தார்.