பெங்களூரு, ஏப்.27
தற்போது நாட்டில் கோவிட் பரவல் அதிவேகம் எடுத்திருக்கும் நிலையில், தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி உள்ளிட்ட சில துறைகளில் வீட்டில் இருந்து பணியாற்றுவது வழக்கமாக மாறியுள்ளது. எனினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சில வாடிக்கையாளர் சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது அவசியம் என்பதால், இந்த நடவடிக்கையை ஹெச்சிஎல் நிறுவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது. இவற்றை தவிர, வாடிக்கையாளர்களிடம் உரையாடுவதுதான் முக்கியமான பணி என்றும் ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஹெச்சிஎல் ஒரு சர்வதேச நிறுவனம். மொத்த பணியாளர்களில் 30 சதத்தினர் வெளிநாடுகளில் உள்ளனர். வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுகொள்ளும் வேகம் அதிகமாக இருப்பதால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் சற்று கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தியச் சூழலை நன்றாக புரிந்துவைத்துள்ளனர். மேலும், அடுத்த சில வாரங்களில் நிலைமை மேம்படும் என யஹச்சிஎல் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு அலுவலகத்திலும் தடுப்பூசி முகாம் அமைத்திருக்கிறோம். அத்துடன், பணியாளர்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதி ஆண்டில் தேவையைப் பொறுத்து, 20,000 பணியாளர்களை பணியமர்த்தவும் ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.