May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் தங்கத்தின் தேவை 37 சதம் உயர்வு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

மும்பை, ஏப்.30

நாட்டில் தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும்; கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 37 சதம் அளவுக்கு தேவை அதிகரித்திருப்பதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து, உலக தங்க கவுன்சில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை, 37 சதம் அதிகரித்து, 140 டன் ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்று சம்பந்தமான கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டது, மற்றும் தங்கத்தின் விலை குறைந்தது ஆகியவை,தேவையை அதிகரிக்க முக்கியமான காரணங்களாக அமைந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், தங்கத்தின் தேவை, 102 டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மதிப்பீட்டு காலாண்டில், தங்கத்தின் தேவை, அதன் மதிப்பின் அடிப்படையின் பார்த்தால், 57 சதம் உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், மதிப்பு, ரூ.37,580 கோடியாக இருந்தது, நடப்பு ஆண்டில், ரூ.58,800 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த ஆபரணங்களின் தேவை, 39 சதம் அளவுக்கு அதிகரித்து, 102.5 டன் ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதேபோல் தங்கத்தின் மீதான முதலீட்டு தேவையும் இந்த காலாண்டில், 34 சதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, ரூ.15,780 கோடி மதிப்புக்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை, சராசரி உள்நாட்டு விலை, 10 கிராம், ரூ.47,131 ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், 14 சதம் அதிகமாகும். ஆனால் காலாண்டு ஒப்பீட்டில் 6 சதம் குறைவாக இருக்கிறது. ஜூன் காலாண்டில், கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக, தேவை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

Spread the love