புது தில்லி, ஏப்.23
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, 10 – 15 சதம் அளவுக்கு சரிவை காணக்கூடும் என, கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் பொது முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் என்றும், கிட்டத்தட்ட, 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் அளவுக்கு விற்பனை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குனர் தருண் பதக் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
சமீபத்தில், பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், விற்பனை பாதிக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த காலாண்டில் விற்பனை சரிவு, 10- 15 சதமாக இருக்கக்கூடும்.
இருப்பினும், இச்சூழல், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றின் தேவையும் இனி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றார். இதனால், நடப்பு முழு நிதியாண்டை பொறுத்தவரை சரிவு எதையும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.