வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
அரியலூர், மார்ச் 14
மண்வளம் காக்கும் வகையில் யூரியா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இப்கோ நிறுவன தயாரிப்பான நானோ திரவ யூரியா 500 மில்லி லிட்டர் பாட்டில் பெரும்பாலான சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
½ லிட்டர் நானோ திரவ யூரியா ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பயனை அளிக்கக்கூடியது. விலையும் குருணை யூரியாவை விட குறைவானது. அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுரத்திற்கு பதிலாக நானோ திரவ யூரியாவை பயன்படுத்தலாம்.
நானோ திரவ யூரியாவானது இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கும். மேலும், மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கும். விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பிற்கேற்றவாறு தேவையான நானோ திரவ யூரியா பெற்று பயன் பெறலாம்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், விக்கிரமங்கலம் கிராமத்தில் நிலக்கடலை பயிருக்கு நானோ யூரியாவை பயன்படுத்தும் விதமும், அதன் முக்கியத்துவத்தையும் செயல்விளக்கம் மூலமாக த.இராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோ.அசோகன் ஆகிய அலுவலர்களால் விவசாயிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.