May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நான்காவது காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிகரலாபம் ரூ.1,551 கோடி

புது தில்லி, ஏப்.30

நான்காவது காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரூ.1,551 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020-21வது நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையிலான நான்காவது காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.8,596 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.6,816 கோடியுடன் ஒப்பிடுகையில் 26 சதம் அதிகமாகும்.

மேலும், இந்நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.1,354 கோடியிலிருந்து 15 சதம் உயர்ந்து ரூ.1,551 கோடியை எட்டியுள்ளது. ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனம் இருசக்கர வாகனம், வர்த்தக வாகனம் என ஒட்டுமொத்த அளவில் 11,69,664 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது, முந்தைய ஆண்டின் விற்பனை அளவான 9,91,961 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 18 சதம் அதிகமாகும்.

கடந்த 2020-21வது முழு நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகரலாபம் 7 சதம் சரிவடைந்து ரூ.4,857 கோடியானது. மொத்த வருவாய் ரூ.29,918.65 கோடியிலிருந்து சரிந்து ரூ.27,741.08 கோடியானது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 39,72,914-ஆக இருந்தது. எனினும் இது, 2019-20ம் நிதியாண்டின் விற்பனையான 46,15,212 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 14 சதம் குறைவாகும்.

மேலும், கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.140 (1,400 சதம்) ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love