August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமக்கல் ஆவினில் பாதாம் பவுடர் விற்பனை

நாமக்கல், ஏப்.27

நாமக்கல் ஆவினில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பால் உபபொருளான பாதாம் பவுடர் விற்பனையை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 26.4.22ல் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு 17.12.18 முதல் தனியாக செயல்பட்டு வருகிறது. தற்போது 510 சங்கங்களில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 1,40,000/- லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது வரை நாமக்கல் மாவட்ட உள்ளூர் விற்பனைக்கு தேவையான பாக்கெட் பால் மற்றும் பால் உபபொருட்கள், சேலம் ஒன்றியத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட விற்பனைக்கென பெறப்படுகிறது. இதற்காக நாமக்கல் ஒன்றியத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 1.05 லட்சம் லிட்டர் பால் சேலம் ஒன்றியத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும் 35,000/- லிட்டர் பால் சென்னை இணையத்தின் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் ஒன்றியத்தின் மூலம் தற்போது முதன் முறையாக பால் உபபொருளான பாதாம் பவுடர் மிக்ஸ் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மக்களின் தேவைக்காக சில்லரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் நாமக்கல் ஒன்றியத்திற்கென சுமார் ரூ7 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் ஆவின் பால்குளிரூட்டும் நிலைய வளாகத்தில் நிர்வாக அலுவலகம், திருச்செங்கோட்டில் விற்பனை அலுவலகம் மற்றும் திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் ஆகிய இடங்களில் குளிர்பதன அறைகள் நபார்டு உதவியுடன் கட்டப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலை நாமக்கல்லிலேயே பதப்படுத்தும் நோக்கில் நாளொன்றுக்கு 2.00 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறனுள்ள பால்பதன ஆலை, தேசிய பால்வள வாரியம், தமிழக அரசு, மத்திய அரசின் நிதி மற்றும் ஒன்றியத்தின் சொந்த நிதி ஆகியவற்றை கொண்டு விரைவில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Spread the love