June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிறைவான மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்

சிவகங்கை, ஜூன் 15

விவசாயத்தில் அதிக மகசூல் பெற்று லாபம் பெற தரமான இடுபொருட்களை உபயோகித்தல் அவசியமாகும். இடுபொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் தரமான விதையாகும்.
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது பழமொழி. தரமான விதைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே விதைகள் சீராக முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கை, சீரான பயிர் வளர்ச்சி, கலப்பிடமில்லாத பயிர் மற்றும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்து அதிக மகசூல் கிடைப்பதுடன் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். தரமான விதை என்பது நல்ல முளைப்புத்திறன், சுத்தத்தன்மை, பிறரகக்கலவன் இன்றி இருத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் இருக்கும் விதையாகும்.

விதையின் புறத்தூய்மை என்பது பயிர்விதையைத் தவிர பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் இருத்தல் வேண்டும்.
நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளே சீராக வளர்ந்து சிறப்பான மகசூல் தரும். நிர்ணயிக்கப்பட்ட முளைப்புத்திறன் நெல்லுக்கு 80%, மக்காச்சோளம் 90%, சோளம், கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு 75%, பயறு வகைகளுக்கு 75%, வெண்டைக்கு 65%, கத்தரி, தக்காளி, நிலக்கடலை 70%, மிளகாய் 60% மற்றும் எள் 80% இருந்தால் மட்டுமே போதிய பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.

நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி மற்றும் நல்ல விளைச்சல் இருக்கும். விதையின் ஈரப்பதம் பயிருக்கு தகுந்தவாறு 7% முதல் 13% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஈரப்பதம் இருந்தால் விதையின் ஆயுட்காலம் மற்றும் முளைப்புத்திறன் குறைந்துவிடும். சரியான ஈரப்பதத்தில் உள்ள விதைகளையே பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்கலாம்.

விவசாயிகள் தாங்கள் உபயோகிக்கும் விதைகளை சிவகங்கை – தொண்டி ரோடு, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் அமைந்துள்ள அரசு விதை பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரியினை கொடுத்து ரூ.80/- கட்டணம் செலுத்தினால், அவ்விதை பரிசோதனை செய்யப்பட்டு விதையின் தரம் குறித்த அறிக்கை விவசாயியின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என சிவகங்கை விதைப் பரிசோதனை அலுவலர்(பொ) இரா.இராமசாமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் அ.லயோலா அன்புக்கரசி, ம.சரஸ்வதி தெரிவித்துள்ளனர்.

Spread the love