நிலக்கடலையில் மண் அனைத்தல் ஒரு முக்கியமான செயல்பாடாகும். தைப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலையில் தற்போது மண் அனைக்க ஏற்ற காலமாகும். இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அனைக்க வேண்டும். விதைத்த 40-45 நாட்களுக்குள் மண் அனைக்க வேண்டும், ஏனெனில் இது மண்ணில் விழுதுகள் ஊடுருவிச் செல்ல உதவுகிறது மற்றும் அதிக காய்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
· மண் அனைத்தல் செடி நிலைப்பதற்கு ஒரு ஊடகமாக பயன்படும்.
· நீண்ட கைப்பிடி கொண்ட மண்வெட்டி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
· விதைத்த 45ம் நாளுக்குப் பிறகு மண்ணில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
ஜிப்சம் பயன்பாடு :
கால்சியம் முக்கியமாக காய் மற்றும் விதை வளர்ச்சிக்காகவே தேவைப்படுகின்றது. நிலக்கடலையில் அதிக மகசூல் மற்றும் தரம் பெற நல்ல ஊட்டச்சத்து தேவை. கால்சியம் குறைபாட்டினால் காய்கள் அழுகல் மற்றும் “பாப்ஸ்” என்று அழைக்கப்படும் நிரப்பப்படாத பொக்கு காய்கள் அதிக அளவில் உண்டாகிறது. ஜிப்சம் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதில் கால்சியம் மற்றும் சல்பர் உள்ளது. அதிக எடையுடன் கூடிய தடிமனான காய்களின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது. சல்பர் பருப்பில் உள்ள எண்ணெய் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. எனவே ஜிப்சம் நிலக்கடலையில் பூக்க ஆரம்பிக்கும் தருணத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜிப்சத்தில் உள்ள கால்சியத்தின் காரணமாக நிலக்கடலை பூக்களிலிருந்து விழுதுகள் மண்ணின் வழியாக எளிதாக ஊடுருவிச் செல்லும். ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் விதைத்த 40-45வது நாளில் இட்டு, மண் அனைக்க வேண்டும்.