October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம்

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

கோவை, அக்.7

நிலம் தயாரித்தல் : மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்.

விதைநேர்த்தி : ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் (சற்று முன்னர்) செய்ய வேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது. ரைசோபியம் 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்), அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்/ எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை அரிசி கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும்.

விதை அளவு : எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்த வேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக இடவேண்டும்.
இடைவெளி : செடிக்கு செடி10 செ.மீ இடைவெளியும் பாத்திக்கு பாத்தி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
உரமிடுதல் : தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அடிப்படையாக 50% + விதைத்த 20ம் நாளில் 25% மற்றும் விதைத்த 45ம் நாளில் 25% அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
களை கட்டுப்பாடு : விதைத்த 3-ம் நாள் ஃப்ளுகுளோரலின் எக்டருக்கு 2.0லி அல்லது பென்டிமெத்தலின் எக்டருக்கு 3.3 லிட்டரை தட்டை விசிறி நுன்குழாய் மூலம் 500 லி தண்ணீர் கலந்து தெளிக்கவும் தொடர்ந்து பாசனம் செய்யவும். விதைத்த 35-40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களைகளை பொறுத்து விதைத்த 20-30ம் நாள் களை முளைத்த பின்னர் இமாசிதிபர் எக்டருக்கு 750 மி.லி தெளிக்கவும்.களைக் கொல்லி உபயோகிக்கவில்லையென்றால் மண்வெட்டி கொண்டு விதைத்த 20 மற்றும் 40ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 3ம் நாள் களை முளைக்கும் முன் ஆக்ஸிப்ளோர்பென் எக்டருக்கு 200 கி தெளிக்கவும். தொடர்ந்து விதைத்த 40-45ம் நாள் கைக்களை எடுக்கவும். களை முளைப்பதற்கு முன் மெட்டலாகுளோர் எக்டருக்கு 1 கிகி அளிக்கவும் தொடர்ந்து விதைத்த 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

மண் அனைத்தல் : இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும். இது நிலக்கடலையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். விதைத்த 40-45ம் நாள் மண் அணைப்பதன் மூலம் முளைகள் மண்ணிற்குள் செல்வது தடுக்கப்படும் மற்றும் காயின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

படுக்கை அமைத்தல் : தண்ணீர் கிடைக்கும் தன்மை, நில சரிவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 மீ முதல் 20 மீ அளவிற்கு படுக்கைகள் அமைக்கவும். வரப்புகளுக்கு இடையே 60 செ.மீட்டரில் வாய்க்கால் அமைக்கவும் மற்றும் வரப்பின் இரண்டு பக்கங்களிலும் விதைக்கவும். 60 செ.மீ அகலத்திற்கு படுக்கை அமைக்கவும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அகலத்திற்கு வாய்க்கால் அமைக்கவும் மற்றும் படுக்கைகளில் விதைக்கவும்.

பாலித்தீன் கொண்டு ஈரப் பாதுகாப்பு மூட்டம் : சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிலக்கடலை காய்களை அதிகரிக்க அகன்ற படுக்கைகள் மற்றும் வாய்க்கால் அமைக்கவும். இதில் அளவில் சிறிய மாற்றங்கள் செய்து பாலித்தீன் கொண்டு ஈரப் பாதுகாப்பு மூட்டம் செய்ய படுக்கைகள் அமைக்கவும். 60 செ.மீ அகலத்திற்கு படுக்கைகள் மற்றும் படுக்கைகளின் இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அளவில் வாய்க்கால் அமைக்கவும். 4.5மீ x 6.0மீ அளவிற்கு 5 படுக்கைகள் அமைக்க வேண்டும். படுக்கை தயாரித்து உரம் அளித்த பின்னர் மண்ணின் மேற்பரப்பில் கருப்பு பாலித்தீன் தாளை பரப்பவும். எக்டருக்கு 50 கிகி பாலீத்தீன் தேவைப்படும். 30 x10 செ.மீ அளவிற்கு துளையிட்டபின் தாளை பரப்பவும். விதை அளவு சாதாரண நிலக்கடலை சாகுபடிக்கு தேவையான அளவு போதுமானது.

நீர் நிர்வாகம் : பூப்பதற்கு முன் : 1-25 நாட்கள்.

பூக்கும் பருவம் : 26-60 நாட்கள்.

முதிர்ச்சி பருவம் : 61-105 நாட்கள், முளைப்பு, பூத்தல், காய் உருவாதல் ஆகிய பருவங்களில் நீர்ப்பாசனம் இன்றியமையாததாகிறது. ஏனெனில் இந்நிலையில் மண்ணின் ஈரப்பதம் அவசியமானது. தற்போது தண்ணீர் சிக்கனப்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் செய்ய தெளிப்பு நீர் பாசனம் அல்லது சொட்டு நீர் பாசனம் செய்யவேண்டும். இதன் மூலம் 30% நீர் தேவையை குறைக்கலாம்.

ஜிப்சம் இடுதல் : ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45வது நாளில் இறவை பயிருக்கும் 40-75வது நாளில் மானாவாரிப் பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும்.

ஊட்டச்சத்து கலவை தெளிப்பு : பெரிய பருப்புகள் கொண்ட இரகங்களில், காய்களின் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதைத் தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்கவேண்டும். இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோவினை 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறு நாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் தயார் செய்யவேண்டும். தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் மருந்து 350 மில்லியை இதில் சேர்த்து விதைத்த 25ம் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.

அறுவடை : முதிர்ந்த இலைகள் காய்ந்தவிடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப் பொறுத்து பயிர் கண்காணிக்கப்படவேண்டும். அறுவடைக்கு முன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். காய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்குமுன் நீர்பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து இரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும். செடிகளிலிருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானை உபயோகப்படுத்தலாம்.

மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்தல் பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட மேளாண்மை குழு தெரிவித்துள்ளனர்.

Spread the love