June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலையில் இயந்திர விதைப்பு முறைகள் மற்றும் அதன் பயன்கள்

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார விவசாயிகள் நிலக்கடலைப் பயிரில் நல்ல விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். நன்கு திரட்சியான, இனத்தூய்மை உள்ள மற்றும் நடுத்தர பருமனுள்ள விதைகளை உபயோகப்படுத்த வேண்டும். மேலும், பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இல்லாமலும், சுமார் 80 சதவிதம் முளைப்புத்திறன் உள்ளது விதைகளையே உபயோகிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரகத்தின் விதை பருமன், விதை முளைப்புத் திறன், நடவு செய்யும் இடைவெளி ஆகியவற்றை பொறுத்து விதை அளவு மாறுபடும். ஆகவே, தரணி என்ற இரகத்தை தேர்ந்தெடுத்தால், ஒரு எக்டருக்கு சுமார் 125 கிலோ முதல் 160 கிலோ வரை விதைப் பருப்புகள் தேவைப்படும்.

மண் வழியாக பரவும் நோய்களான வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்களால் இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. உயிர் நோய்க் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி (அ) டிரைக்கோடெர்மா ஹார்சியானத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் மண் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கலாம். உயிர் நோய்க் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் சுமார் 30 நாட்களுக்கு பயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. இந்த விதை நேர்த்தியை விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே செய்ய வேண்டும். மேலும், உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் பயிருக்கு இடப்படும் உரத்தின் அளவைக் குறைத்து சாகுபடிச் செலவை வெகுவாகக் குறைக்கலாம். ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளுடன் ரைசோபியம் (600 கிராம்), அசோஸ்பைரில்லம் (600 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (600 கிராம்) ஆகியவற்றை அரிசி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது விதையின் மேல் உறை பாதிக்காத வண்ணம் நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்த அதே நாளில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மற்றும் இடைவெளி
எருது அல்லது டிராக்டரினால் இயக்கப்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட, விதை விதைக்கும் கருவியினைப் பயன்படுத்தி விதைகளை சுமார் 5 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். விதைப்பிற்கு இக்கருவியினை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில், ஒன்றிரண்டு கூலி ஆட்களின் உதவியுடன் விதைப்பினை முடிக்க முடியும். மானாவாரி பட்டத்தில் விதைக்கும் போது மண்ணில் போதுமான அடர்கொத்து இரகங்களை 30 x 15 செ.மீ. இடைவெளியிலும் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்கலாம். இதன் மூலம் கொத்து இரகங்களில் ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகளையும், அடர் கொத்து இரகங்களில் 22 செடிகளையும் பராமரிக்கலாம்.

ஊட்டச்சத்து மேலாண்மை
நிலக்கடலையின் விளைச்சலை அதிகரிக்க ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் அவசியம். விதைப்பதற்கு 25 – 30 நாட்கள் முன்னதாக எக்டருக்கு 10 – 12 டன் தொழு உரம் இடவேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, கொளுஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மடக்கி உழவு செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம். நிலக்கடலைப் பயிரானது, நிலத்தில் உள்ள உரச்சத்துக்களை நன்கு உபயோகிக்கும் திறன் கொண்டது. எனவே, நிலக்கடலை பயிரிடும் நிலத்தின் முந்தையப் பயிருக்கு இடப்பட்ட எஞ்சிய உரச்சத்துக்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். மண் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரமிடுவதே சாலச் சிறந்தது ஆகும். பொதுவாக நிலக்கடலை பயிர் செய்ய மானாவாரி நிலத்திற்கு எக்டருக்கு 10 : 10 : 45 கிலோ என்ற அளவிலும், இறவைப் பயிர் சாகுபடி செய்ய எக்டருக்கு 25 : 50 : 75 கிலோ என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். மணி சத்தை முழுமையாக அடியுரமாகவும், தழை மற்றும் சாம்பல் சத்துக்களை 2 அல்லது 3 பாகமாக பிரித்து விதைப்பு முதல் காய் பிடிக்கும் பருவம் வரை மேலுரமாக இட வேண்டும். மேலும், 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாகவும், விதைத்த 45வது நாளில் எக்டருக்கு 200 கிலோ ஜிப்சத்தை மேலுரமாகவும் இட்டு மண் அணைப்பதின் மூலம் பயிரின் காய்பிடிக்கும் திறன் அதிகரித்து நல்ல திறட்சியான பருப்பினைப் பெறவும் வழிவகுக்கின்றது. நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் பொதுவாக போரான், துத்தநாகம், இரும்பு மற்றும் கந்தகச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்தின் குறைபாடு பரவலாக காணப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “நிலக்கடலை ரிச்” என்ற நுண்ணூட்டச்சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய கலவையை எக்டருக்கு 5 கிலோ அளவில் விதைத்த 30-வது மற்றும் 60-வது நாட்களில் என இரு முறைத் தெளிக்க வேண்டும். ஒரு எக்டருக்குத் ஐந்து கிலோ நுண்ணூட்டக் கலவையை 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும்.

களை மேலாண்மை
நிலக்கடலை விதைப்பு செய்த உடன், நிலத்தில் நல்ல ஈரம் இருக்கும் வரையில் பென்டிமெத்திலின் எக்டேருக்கு 2.5 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கரைத்து கைதெளிப்பான் கொண்டு அல்லது தேவையான மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவுவதன் மூலம் பயிரின் இளம் பருவத்தில் தோன்றும் களைகளை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து களைகள் முளைப்பதை பொறுத்து ஒன்று அல்லது இரண்டு கைக்களைகள் எடுக்க வேண்டும். விதைத்த 45-ஆவது நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். மண்ணில் விழுதுகள் இறங்கிய பின் செடிகளை பாதிக்கும் உபகரணங்களை (மண்வெட்டி, கொத்து) கொண்டு வேலை செய்யக் கூடாது விதைத்த 45-ஆவது நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். மண்ணில் விழுதுகள் இறங்கிய பின் செடிகளை பாதிக்கும் உபகரணங்களை (மண்வெட்டி, கொத்து) கொண்டு வேலை செய்யக் கூடாது.

பயிர் பாதுகாப்பு
பூச்சி கட்டுபாடு :

நிலக்கடலைப் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாணக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது, ஒரு எக்டருக்கு பரிந்துரைக்கப்படும் மருந்தினை 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலமாகவோ அல்லது 200 லிட்டர் நீரில் கரைத்து விசைத் தெளிப்பான் மூலமாகவோ தெளிக்க வேண்டும். புரோடினியா புழு, பச்சைப் புழு மற்றும் சிவப்பு கம்பளிப்புழு ஆகியவை பயிரின் இலைகளைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இந்த இலைப் புழுக்களின் சேதம் 25 சதவிகிதத்தை தாண்டும் போது விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. இவைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நிலக்கடலைப் பயிரிடப்படும் நிலத்தைச் சுற்றி ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற பயிர்களை ஷபொறி பயிராக பயிரிட்டு அவைகளின் இலைகளில் உள்ள முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். பறவைகள் உட்காருவதற்கு ஏதுவாக ஒரு எக்டருக்கு 10 – 15 பறவைத் தாங்கிகளை நடுவதனால், பறவைகள் புழுக்களை பிடித்து உண்ணும்படி செய்யலாம். ஒரு எக்டருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை பருப்பு சாற்றினை தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய முறை மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இறுதியாகத் தான் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்க வேண்டும்.

நோய் கட்டுபாடு
நிலக்கடலையில் இலைப்புள்ளி நோய்கள் மட்டும் தென்படும் போது எக்டருக்கு கார்பென்டாசிம் 50 றுP 500 கிராம் அல்லது மான்கோசெப் 50 றுP 1000 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். துருநோய் மட்டும் தென்பட்டால் எக்டருக்கு குளோரோதலோனில் 75 றுP 1000 கிராம் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறிதென்பட்ட உடனேயே மருந்து தெளித்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டால் 10-15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும். துரு மற்றும் இலைப்புள்ளி இந்த இருவகை நோய்களின் அறிகுறிகளும் சேர்ந்து தென்படும் போது எக்டருக்கு குளோரோதலோனில் 75 றுP 1000 கிராம் தெளிக்க வேண்டும். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி’ அல்லது டிரைக்கோடெர்மா ஹார்சியானம் போன்ற உயிர் நோய்க் கொல்லிகளை 1 கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது. மேலும், இவைகளில் ஒன்றை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது ஆமணக்கு புண்ணாக்குடன் கலந்து நிலக்கடலை விதைப்பதற்கு முன் மண்ணில் இட வேண்டும். நிலக்கடலை மொட்டு கருகல் நோயைத் கட்டுப்படுத்த விதைகளை ஷஇமிடாகுளோபிரிட் பூச்சிக் கொல்லியைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் இந்நோயை பரப்பும் இலைப்பேன்கள் கட்டுப்படுத்தப்படுவதால், பயிரின் முதல் 30 நாட்களுக்கு நோய்த் தாக்குதலை தடுக்கலாம்.

அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
நிலக்கடலையில் காய்களில் உள் ஓடு 75 – 80 சதவிகிதம் கருமை அடைந்திருந்தால் அறுவடை செய்யலாம். மழைக் காலங்களில் காய்கள் முளைக்க ஆரம்பிக்குமானால் 75 – 80 சதவிகிதம் முற்றும் வரை பொறுத்து இருக்கத் தேவையில்லை. காலம் கடந்து அறுவடை செய்வதனால் காய்கள் நிலத்தில் தங்குவதுடன், காய்களின் தரமும் குறைந்து விடுகின்றது. செடிகளை நிலத்தை விட்டு பிடிங்கிய உடன் காய்கள் மேற்பக்கம் இருக்குமாறு போட்டு 2 – 3 நாட்கள் கழித்து காய்களை பறித்து 3 – 4 நாட்கள் நன்றாக உலர்த்த வேண்டும். மகசூல் 1000 கிலோ / எக்டர் மகசூல் கிடைக்கும். 105 நாட்களில் ரூ.80,000/- லாபம் கிடைக்கும். செலவு போக ரூ.70,000/- வருமானம் கிடைக்கும்.

காய்களை நன்கு காய வைத்து விதைகளை பூச்சி, பூஞ்சாண நோய்கள் தாக்காது. காய்களை, உள்புறம் பாலிதீன் பதிக்கப்பட்ட சாக்குகளில் சேமிக்க வேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள, எலிகள் புகாத சேமிப்பு அறையில் தரையில் மரப்பலகைகளை வைத்து அதில் மூட்டைகளை சுவரில் படாத வகையில் அடுக்கி வைக்க வேண்டும். ஒரு அடுக்கிற்கு ஐந்து மூட்டைகள் உயரத்திற்கு மட்டுமே அடுக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காக்க, லிண்டேன் 5 சதவிகித தூள் அல்லது மாலத்தியான் 5 சதவிகித தூளை மூட்டைகளின் மேல் தூவ வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால், மூட்டைகளை பாலிதீன் விரிப்பால் மூடி உள்ளே செல்பாஸ் மாத்திரைகளை ஒரு மூட்டைக்கு 3 கிராம் வீதம் வைத்து 4 – 5 நாட்களுக்கு நன்றாக மூடி வைப்பதனால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும் என்ற விளக்கத்தினை வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி எடுத்து கூறினார். அட்மா திட்ட அலவலர்களான பெ.ஸ்ரீரங்கசெல்வி மற்றும் கோபாலகிருஷ்ணன் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்த கூறினர்.

Spread the love