விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தகவல்
திண்டுக்கல், ஜூலை 20
நிலக்கடலையில் மண் மற்றும் விதை மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணமான் டிரைகோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதுபோல காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க ரைசோபியம் நுண்ணுயிரைக் கொண்டு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க உயிர்க்கொல்லியான டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் 10 கிராம் சூடோமோனாஸ் உடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நிலக்கடலை வளர்ச்சிக்கு குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைப்பதன் மூலம் உரச் செலவை குறைத்து மண்ணின் இயல்பை பாதுகாக்கலாம். ஹெக்டருக்கு தேவையான 125 கிலோ முதல் 160 கிலோ விதைப் பருப்புடன் 600 கிராம் ரைசோபியம் கலந்து விதைப்பதன் மூலம் நைட்ரஜனை பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்து தேவையினை குறைக்கலாம். 600 கிராம் பாஸ்போபேக்டீரியாவை ஹெக்டருக்கு தேவையான விதைப் பருப்புடன் கலந்து விதைத்தால் பயிருக்கு தேவைப்படும் மணிச்சத்து அளவு குறையும். விதை நேர்த்தி செய்யும் போது, விதைகள் உயிர்ச்சத்துடன் ஒட்டும் வகையில் அரிசி கஞ்சியில் சேர்த்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். (விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக செய்தால் 30 நாட்களுக்கு பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது).