June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலையில் விதை அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சமீபக் காலமாகக் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரைப் போன்ற மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றி அதிகச் சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் விதை அழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி
இந்நோய் ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பூசண இழைகள் சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படக்கூடிய பகுதி ஒட்டுண்ணிகளாகும். கால நிலை சாதகமாக அமையும் போது அவை விதைகளைத் தாக்கி நோயை உண்டாக்குகின்றன.

நோயின் அறிகுறிகள்
இந்நோய்க்காரணி விதைகளை அவை முளைப்பதற்கு முன்னரேத் தாக்கி விதை அழுகல் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். மேலும் விதைகள் முளைத்து இளம் செடிகள் நிலத்திற்கு மேல் வரும் முன்னரே விதை இலைகளை அழுக வைத்தல், முளைத்தச் செடிகளில் கழுத்து அழுகலைத் தோற்றுவித்தல் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். முளைத்து இளம் செடிகள் நிலத்திற்கு மேல் வரும் முன்னரே அழுகிய விதைகளைச் சோதித்துப் பார்த்தால் அவற்றின் மேற்பரப்பில் பூசண வளர்ச்சியும், பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடித் தூவியதைப் போலக் கோனிடியா வித்துக்களும் காணப்படும். இந்நோய்க் காரணிகள் அஃப்லாடாக்சின் என்னும் நச்சுப் பொருளை உற்பத்தி செய்கின்றன. இந்த நச்சுப் பொருட்களும் விதைகளை அழுகச் செய்யும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
இந்நோய்க் காரணி காற்றின் மூலம் பரவக் கூடியது. ஓரளவு விதை மூலமும், மண் மூலமும் பரவக் கூடும். மண்ணின் வெப்பநிலை அதிகமாகவும், ஈரப்பதம் மிதமாகவும் காணப்படும் போது, இந்நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

நோய்க்கட்டுப்பாடு
உழவியல் முறைகள் :
 நோய்த் தாக்காத நல்ல தரமான விதைகளை விதைப்பதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 விதைக் கிடங்குகளில் ஈரப்பதம் அதிகமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 விதைகளை சரியான படி உளற வைத்துப் பின்னர் சேமித்து வைக்க வேண்டும்.

விதை சிகிச்சை
ஒரு கிலோ விதைக்கு திரம்–3 கிராம் அல்லது காப்டன்–3 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரேக் கலந்து வைத்திருந்துப் பின்னர் விதைக்க வேண்டும்.

கட்டுரை : கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, தொடர்பு எண்: 82488 33079, மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com. செ.மீனாட்சி, முதுகலை வேளாண் மாணவி – நுண்ணியல் துறை, தொடர்பு எண்: 86083 50693, மின்னஞ்சல் : tamilmeena6131@gmail.com, முனைவர்.த.சுதின் ராஜ், உதவிப் பேராசிரியர் – தாவர நோயியல் துறை, தொடர்பு எண்: 94420 29913, மின்னஞ்சல் : suthinagri@gmail.com, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் –608 002.

Spread the love