January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலை சாகுபடியில் விதை பரிசோதனை அவசியம்

திருச்சி, டிச.22

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் நிலக்கடலையின் தரத்தை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் து.மனோன்மணி தெரிவித்துள்ளார்.

நிலக்கடலை எண்ணெய் வித்து பயிர்களின் அரசன் மற்றும் ஏழைகளின் முந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி, உப்பிலியபுரம், துறையூர், தா.பேட்டை, தொட்டியம், வையம்பட்டி, முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டாரங்களில் பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் நிலக்கடலை பயிரிட மார்கழி பட்டம் மாசி பட்டம் மற்றும் சித்திரை பட்டம் உகந்தது.

நிலக்கடலை சாகுபடியில் நல்ல விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம், புறத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் பிற ரகங்களின் கலப்பு விகிதம் ஆகியவற்றால் விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி நிலக்கடலையின் முளைப்புத்திறன் 70%, ஈரப்பதம் 9% மற்றும் புறத்தூய்மை 96% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குலுக்கு வழி வகுக்கும். மேலும், முளைப்புத்திறன் பாதிக்கப்படும். புற ரகங்களின் விகிதம் அதிகமானால் இனத்தூய்மை பாதிக்கப்படும். விதை பரிசோதனை செய்வதற்கு 500 கிராம் நிலக்கடலை விதையை விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் விதை பரிசோதனை நிலையம், அரசு பல்துறை வணிக வளாக கட்டிடத்தின் பின்புறம், காஜாமலை, திருச்சி-20 என்ற முகவரியில் அமைந்துள்ளது. விதை மாதிரி அனுப்பும் போது, அது விதைக் குவியலின் பிரதியாக இருக்கவேண்டும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாதிரிகளை அனுப்பும் போது, ஒவ்வொரு மாதிரிக்கும் குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும். சுத்தமான பையில் விதை மாதிரிகளை எடுத்து பயிர் மற்றும் ரகத்தின் விவரங்கள் அடங்கிய துண்டு சீட்டு உள்ளே வைத்து கட்டி அனுப்பலாம். ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 பரிசோதனை கட்டணம் செலுத்த வேண்டும் என திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Spread the love