September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலை விதைப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், செப்.13

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தில், அடிப்படை இடுபொருட்கள் பலவாக இருந்தாலும், விதைத் தேர்வு என்பது இன்றியமையாத காரணியாகும். விதைத் தேர்வு சரியாக இல்லாவிட்டால், மொத்த சாகுபடியும் பலனற்றுப் போகும். விவசாயிகளின் அடிப்படைத் தேவையான விதையினை தரமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையானது ஏற்படுத்தப்பட்டு தரமான விதைகளை விவசாயிகள் பெற அயராது பணியாற்றி வருகிறது.

தொன்றுதொட்டு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த அல்லது அருகிலுள்ளோர் உற்பத்தி செய்த விதைகளையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பிற இரகக்கலவன் அதிகம் ஏற்பட்டு, ஒரே நேரத்தில் அறுவடை செய்ய இயலாமல், விலைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காமல் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வந்தனர். தற்பொழுது சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் அதிக முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு வருதல் மற்றும் அதிக மகசூல் கிடைப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருளுக்குத் தகுந்த விலை கிடைக்கிறது.

விவசாயிகளின் விதைத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, விதைப்பறிக்கை பதிவு செய்யப்பட்டு, விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு செய்யப்பட்டு பிற இரகக்கலவன் நீக்கப்பட்டு, வயல் தரத்தில் தேறும் பட்சத்தில் சுத்தியறிக்கை வழங்கப்பட்டு, சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு முடிவறிக்கையில் விதைத் தரத்தில் தேறும் பட்சத்தில் சான்றட்டை பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு விதைகளாக விநியோயம் செய்யப்படுகிறது.

அவினாசி வட்டாரத்தில் சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலையானது மானவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விதைத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நிலக்கடலை விதைப்பண்ணையானது 130 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதிர்ச்சிப் பருவத்தில் உள்ள கந்தசாமி என்பவரது நிலக்கடலை விதைப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு செய்தார்.

நிலக்கடலை இரகம் தரணி இரகமானது குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரவல்லதாகும். 105 நாட்கள் ஒரு ஏக்கருக்கு 196 டன் மகசூல் தரக்கூடிய இந்த இரகத்தின் குணாதிசயங்கள் பற்றி கேட்டறிந்தார். மேலும், விதைப்பண்ணை வயலாய்வின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள், பிற இரகக் கலவன் நீக்கம், மகசூல் காரணிகள் கணக்கீடு போன்றவை குறித்து அவிநாசி, விதைச்சான்று அலுவலர், கவிதா விரிவாக எடுத்துரைத்தார்.

விதைச்சான்று அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விதைத் தரத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படாவண்ணம் ஆய்வு மேற்கொண்டு தரமான பிற இரக கலப்பற்ற நல்ல விதைகள் விவசாயிகள் பெற ஏதுவாக பணி புரிய வேண்டும். விதைப்பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாமல் அனைவருக்கும் தரமான விதை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் பொழுது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக (வேளாண்மை) உதவியாளர் வி.சி. மகாதேவன், வேளாண்மை உதவி இயக்குநர், அருள்வடிவு, அவிநாசி, விதைச்சான்று அலுவலர், எஸ்.கவிதா மற்றும் உதவி விதை அலுவலர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love