June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து உர மேலாண்மை

சிவகங்கை, ஏப்.12

சிவகங்கை மாவட்டத்தில், சிங்கம்புணரி வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து உர மேலாண்மை கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்ல உர மேலாண்மை என்பது மண்ணின் வளத்தை அறிந்து (மண் பரிசோதனை) உரமிடுவது. சமீப காலத்தில் பொதுவாக மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு குறைவாக இருக்கின்றன. கரும்புப் பயிரின் வளர்ச்சிக்கும், விளைச்சல் மற்றும் சர்க்கரைக் கட்டுமானத்திற்கும் நுண்ணூட்டச் சத்துக்கள் மிகவும் அவசியமாகும். பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு ஒன்றுக்கும் கூடுதலான நுண்ணூட்டச் சத்துக்கள் இணைந்து செயல்படுவதால் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை அடையாளங்கள் சில சமயங்களில் தெளிவாகத் தெரிவதில்லை. தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

· துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்ணில் அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட் அளிக்கவும்.
· கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள் இருந்தால் இலைத் தெளிப்பாக 0.5 சதவிகிதம் துத்தநாக சல்பேட்டை 1 சதவிகிதம் யு+ரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.
· இரும்பு பற்றாக்குறையுள்ள மண்ணில் அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ பெர்ரஸ் சல்பேட் அளிக்கவும்.
· கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள் இருந்தால் இலைத்தெளிப்பாக 1 சதவிகிதம் பெர்ரஸ் சல்பேட்டை 1 சதவிகிதம் யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.
· தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைவழித் தெளிப்பாக 0.2 சதவிகிதம் தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.
· மாங்கனீசு பற்றாக்குறையுள்ள மண்ணில் (25 – 75 கிலோ மங்கனீசு / ஹெக்டர்) மண்ணில் இட வேண்டும்.
· கரும்பில் மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறிகள் இருந்தால் 0.5 – 1.0 % மாங்கனீசு சல்பேட் கரைசலை (7.5 – 15 கிலோ மாங்கனீசு / ஹெக்டர்) மூன்று அல்லது நான்கு முறை இலைவழி மூலம் தெளித்தல் வேண்டும்.
· சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களில் பொதுவாக போரான் பற்றாக்குறைத் தோன்றும். போரான் பற்றாக்குறையைப் போக்குவதற்கு 0.02 % போரிக் அமிலத்தை (2 கிராம் போரிக் அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்) இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும்.
· போரான் பற்றாக்குறை உள்ள நிலங்களில் ஹெக்டருக்கு 1.5-2.0 கிலோ போரான் அல்லது போராக்ஸ் மண்ணில் இட வேண்டும்.
· பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ பெர்ரஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 5 கிலோ காப்பர் சல்பேட் 5 கிலோ போராக்ஸ் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது (அல்லது)
· கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.
(அல்லது)

· தமிழ்நாடு வேளாண்மைத்துறை கரும்பு நுண்ணூட்ட உரக்கலவையினை 25 கிலோ / எக்டர் என்றளவில் மண்ணில் தொழு உரத்துடன் கலந்து இடலாம்.

Spread the love