May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீர் பாசனக் கருவிகளுக்கு நூறு சதவீத மானியம்

சேலம், மே 10

ஓமலூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் நீர் பாசனக் கருவிகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண்மை துறை சார்பில் கரோனா காலத்திலும் கூடுதல் வேளாண் விளைப்பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நீலாம்பாள் கூறியதாவது, ஓமலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு உள்பட்டு 33 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் கோடை விவசாயத்தை மேற்கொள்ள ஓமலூர் வேளாண்மை துறை சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மானாவாரி மற்றும் இரவை சாகுபடி செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு அரசு மானியம் வழங்கபட்டு வருகிறது.

தற்போதுள்ள கோடைகால நீரின் பற்றாக்குறையைப் போக்கவும், கோடைகால பயிர்களான நிலக்கடலை, தட்டைபயறு, பாசிபயறு, சோளம் போன்ற பயிர்களுக்கு தெளிப்பு முறையில் நீர் பாசன முறையைப் பயன்படுத்திக்கொள்ள மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகின்றன.

கோடை காலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரின் நீர் தேவையைப் போக்குவதற்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம். சொட்டுநீர் பாசனத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 85,000ம், தெளிப்புநீர் பாசனத்துக்கு ரூ.20,000ம், மழை தூவன் வாங்குவதற்கு ரூ.30,000ம் என மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நீர்ப்பாசன கருவிகளை மானியத்தில் வாங்குவதற்கு, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயி சான்றிதழ், ஆதார் அட்டை நகல் முதலியவற்றை தங்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி வேளாண்மை அலுவலரிடம் ஒப்படைத்து, மானியத்தில் பாசன கருவிகளைப் பெற்று பயனடையுமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love