October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசன உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை, அக்.12

புதுக்கோட்டை மாவட்டம், கண்ணங்குடி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனுமந்தக்குடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் பயிற்சி நடைபெற்றது.

கண்ணங்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், தலைமை வகித்து பேசுகையில், கண்ணங்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயறு வகைகள் மற்றும் எண்ணைவித்து பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் மழைத்தூவான் மற்றும், தென்னை விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதைபோல் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, நிலவரைபடம், பட்டா, அடங்கல் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து அனைத்து விவசாயிகளும் பயனடைய கேட்டு கொண்டார். மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் கூறியதாவது, சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதமடைந்தால் நிதி உதவி வழங்கி பாதுகாக்க திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய கேட்டு கொண்டார். இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.361.52/- வீதம் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.24,101/- ஆகும். காப்பீட்டு கட்டணத்தை பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 15.11.2021க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொண்டார். ஜெயின் இரிகேஸன் நிறுவனத்தை சேர்ந்த உழவியல் நிபுணர் செ.தவராஜ், பயிற்சியாளராக பங்கேற்று கூறியதாவது, நுண்ணீர் பாசன அமைக்கும் முறை அதன் பராமரிப்பு முறையினையும் செயல்விளக்கமாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். சக்தி இயற்கை உரம் நிறுவனத்தை சேர்ந்த ந.அருண் ரத்தினம், பங்கேற்று கூறியதாவது, இயற்கை மருந்து மற்றும் இயற்கை உரங்கள் பற்றியும் இயற்கை உரங்களை சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி வழங்கினார்கள். வேளாண் தொழில் கல்வி ஆசிரியர் கி.சீனிவாசன், கூறியதாவது நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் கிணறுகளில் உள்ள குறைந்த அளவு நீரை பயன்படுத்தி கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்திடலாம், இதனால் நீர் வீணாவது தடுக்கப்படுகிறது, மகசூல் இரட்டிப்பாக கிடைக்கிறது என்று கூறினார். கலந்துரையாடல் மூலம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பெ.மாரிமுத்து, கலந்து கொண்டார். இப்பயிற்சியில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வேளாண் தொழிற் கல்வி மாணவர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடினார்கள். பயிற்சி முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.கிருஷ்ணசாமி, நன்றியுரை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அ.சதிஸ்குமார் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Spread the love