October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெற்பயிரில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு

மதுரை, அக்.6

நுண்ணுயிர் உரங்களானது தொடர்ந்து பயிர்களுக்கு சத்துக்கனை உற்பத்தி செய்து கொடுக்கும் தன்மை படைத்தவை. தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரமான அசோஸ்பைரில்லம் மூலமாக ஒரு ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது. மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தினை நுண்ணுயிர் உரமான பாஸ்போபாக்டீயா கரைத்து பயிர்களுக்கு அளிக்கின்றது. பயிர் ஊக்கிகனை உற்பத்தி செய்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மண்வளம் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையும் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்றது.

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரம் ஒவ்வொன்றும் 10 பாக்கெட் (2 கிலோ) என்ற அளவில் எடுத்து 25 கிலோ மக்கிய தொழு உரத்துடன் அல்லது 25 கிலோ மணலுடன் நன்கு கலந்து நடவிற்கு முன் சீராக தூவ வேண்டும் அல்லது 20 பாக்கெட் (4கிலோ) அசோபாஸ் பயன்படுத்தலாம். அசோலா எக்டருக்கு 250 கிலோ என்ற அளவில் நட்ட மூன்றிலிருந்து ஜந்து நாட்களுக்குள் பரவலாக தூவி நெற்பயிருடன் வளர விடவேண்டும். அசோலா வளர்ச்சியடைந்த நிலையில் நெல்லிற்கு களை எடுக்கும் தருணத்தில் ரோட்டரி களை கருவி அல்லது காலால் மண்ணிற்குள் அமிழ்த்து விடவேண்டும். அசோலாவானது 10 நாட்களுக்குள் மக்கி தழைச்சத்து நெற்பயிருக்கு சீராக கிடைக்க வழிவகுக்கிறது. இவ்வாறு பயன்படுத்தும்போது எக்டருக்கு 30-40 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது. மேற்கண்ட நுண்ணுயிர் உரங்களை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள நுண்ணுயிரியல் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகளான முனைவர் சீ.கிருஷ்ணகுமார் மற்றும் மு.ஹேமலதா ஆகியோரை அணுகலாம்.

Spread the love