August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல்லில் தரமான விதை உற்பத்தி செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்

தஞ்சாவூர், ஜூலை 13

நெல்லில் தரமான விதை உற்பத்தி செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் தெரிவித்துள்ளார்.

விதை உற்பத்தி என்பது அறிவியல் சார்ந்த வேளாண் உற்பத்தி முறையாகும். விதை உற்பத்திக்கு நிலம் தேர்வு செய்து விதைப்பு முதல் அறுவடை வரை உயரிய தொழில்நுட்பங்களை கையாள்வதுடன் தகுந்த ஆய்வாளர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட விதையின் புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத் திறன் ஆகியவை இந்திய விதைச்சட்டம் நிர்ணயித்த அளவுகளின் வரைமுறைகளுக்கு உட்பட்டால் மட்டுமே விதைகள் விநியோகிக்கப்படுகின்றன.

விதைத்தேர்வு
விதை உற்பத்திக்கு தேர்ந்து எடுக்கப்படும் இரகமானது விதை உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தட்ப வெட்ப நிலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்
தரமான விதை நெல் உற்பத்தி செய்ய வரிசை நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்ற வேண்டும். தூர்கட்டும் பருவத்திற்கு முன் நீரை வடித்து தூர் கட்டும் பருவம் முதல் முறையாக நீர் பராமரிக்க வேண்டும்.
பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். உர நிர்வாகம்
மண் பரிசோதனையின் படி பயிருக்கு உரமிட வேண்டும். பொது பரிந்துரையின்படி தூர் கட்டும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் உரத்தினை பிரித்து இடுதல் வேண்டும். மேலும் நிலத்தின் குறைபாட்டிற்கு தக்கவாறு நுண்ணூட்டச் சத்துக்களின் தேவையையும் கண்டறிந்து இடுதல் அவசியம்.

களை நிர்வாகம்
விதை உற்பத்தி செய்யும் போது களைகள் இல்லாமல் வயல் தூய்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். களைகள் அகற்றப்பட இல்லையென்றால் விதை உற்பத்தி குறைவதோடு மட்டுமல்லாமல் விதையின் புறத் தூய்மை மற்றும் இனத்தூய்மை பாதிக்கப்படுகின்றது. கையினால் அல்லது கோனோ வீடர் கருவி பயன்படுத்தி நட்ட 30 முதல் 35 நாட்களுக்குள் களை எடுப்பது மிக அவசியம். கலவன் அகற்றுதல் விதை உற்பத்தியில் விதைப் பயிரின் இனத் தூய்மையை பாதிக்கும் என்பதால் பயிர் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் கலவன் அகற்றுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது
. பூக்கும் முன் அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகளை நீக்க வேண்டும்
பூக்கும் தருணத்தில், முன்னதாக பூக்கும் செடிகள் மற்றும் தாமதமாக பூக்கும் செடிகள், மீசை நெல் மற்றும் சிகப்பு பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்க வேண்டும்
.
அறுவடைக்கு முன்பு
விதைப்பயிர் மணியின் பருமனுக்கு
ஒத்து பார்த்து அதை விட பருமனாகவோ அல்லது சன்னமாகவோ உள்ளவற்றை நீக்க வேண்டும். குறிப்பிட்ட நெல் ரகத்தின் குணாதிசயங்களில் இருந்து மாறுபட்டு தெரிகின்ற எல்லா தூர்களையும், களைச் செடிகளையும் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் நீக்க வேண்டும்.

கலவன் செடிகளை வேரோடு களைந்தெறிய வேண்டும். தொடர்ந்து 2 முதல் 3 முறை அதிகாலையில் கலவன்களை அகற்றும் பணியினை மேற்கொள்ளுதல் மிகவும் சிறந்தது

அறுவடை
90 சத விதைகள் பொன்னிறமாக மாறிய பிறகு அறுவடையை மேற்கொள்ளலாம். அறுவடையின்போது பொதுவாக விதையின் ஈரப்பதம் 17- 20 சதவீதத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும். அறுவடை செய்யும் போது விதை காயங்கள் ஏற்படாதவாறு கவனமுடன் கையாள வேண்டும்.

உலர வைத்தல் அறுவடை முடிந்தவுடன் விதைகளை உடனடியாக உலர வைத்தல் அவசியம். உலர்த்தும் போது வேறு ரக விதைகள் இருக்கக்கூடாது. காலை 8-12 மணி வரையிலும் மாலை 3 -5 மணி வரையிலும் சூரிய ஒளியில் உணர்த்த வேண்டும். உணர்த்தும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். பொதுவாக நெல் விதைகளை 13 சதவீத்திற்கு கீழ் உலர்த்தி பதர்கள் மற்றும் பயிரின் பாகங்களை நீக்கி ‌சுத்தம் செய்து புதிய சாக்குகளில் நிரப்பி விதை சுத்தி நிலையத்திற்கு அனுப்பிட வேண்டும்.

எனவே வளர்ந்து வரும் விதை தேவைக்கு ஏற்ப விவசாயிகள் தானிய பயிர் உற்பத்தியுடன் விதை நெல் உற்பத்தியையும் இணைந்து மேற்கொள்வதால் அதிகம் லாபம் பெறலாம். ஆகையால் மேற்கூறிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான விதை நெல் உற்பத்தி செய்து தாங்களும் தங்களைச் சுற்றியுள்ள விவசாயிகளும் பயன் பெற கேட்டுக் கொண்டார்.

Spread the love