June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, ஜூன் 15

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது குறுவைச் சாகுபடி ஏறத்தாழ 3,700 எக்டர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் குறுவைச் சாகுபடி செய்து வருகின்றனர். எனவே, குறுவைச் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் சன்ன இரகங்களை அதிகளவில் சாகுபடி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது கோ-51, ஏடிடி -45 மற்றும் ஏ.டி.டி.-43 ஆகிய சன்ன இரகங்கள் குறுவைச் சாகுபடிக்கு உகந்தவையாகும். இதனால் நெல் சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கும். எனவே, தாங்கள் சாகுபடி செய்யும்போது மோட்டா இரகங்களை காட்டிலும் சன்ன இரகங்களை அதிகளவில் சாகுபடி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் சீர்மிகு நெல் சாகுபடி முறையினைப் பின்பற்றி 25 செ.மீ. × 25 செ.மீ. இடைவெளியில் ஒற்றை நாற்றுகள் நடவு செய்வதனால், செலவு குறைந்து கூடுதல் மகசூல் பெறலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், எதிர்வரும் சம்பா பருவத்திலும் இதே போன்று கடைப்பிடிக்க இப்போதே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆடுதுறை-39, டிகேஎம்-13, என்எல்ஆர்-34449 சம்பா மசூரி ஆகிய சன்ன நெல் இரகங்களைத் தேர்வு செய்து சம்பா நெல் சாகுபடி செய்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. சிஆர்-1009 சப்-1 போன்ற மோட்டா இரகங்களை குறைந்த அளவில் சாகுபடி செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறுவைப் பருவத்தில் நன்செய் நிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதனால் மண்வளம் மேம்படும். நீர்ப்பாசனத் தேவை குறையும். ஆகவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நெல் சாகுபடியில் அதிக அளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திடுமாறும் நீர்த் தேவையைக் குறைக்க மாற்றுப் பயிர் சாகுபடி செய்யுமாறும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Spread the love