August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் சாகுபடியில் விதை நேர்த்தி

தஞ்சாவூர், ஆக. 4

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பதற்கு நாற்றங்கால் தயார் செய்து வரும் வேளையில், எளிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம் என மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் தெரிவித்தார்.

இது பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

விதை நேர்த்தி என்பது விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கவும், பயிர் களை நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கவும், விதைக்கும் முன்பு விதைகளை ரசாயன பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்களை கொண்டு உயிர் உரங்களுடன் மேல்பூச்சு செய்வதே ஆகும்.

பயன்கள்

  1. விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கின்றது. 2.விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்துகிறது.
    3.பயிர்களில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.
    4.பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.
    5.இதில் பயன்படுத்தபடும் நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள கனிமப் பொருட்களை பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு நீண்டகால பாதுகாப்பைத் தருகிறது.
    6.உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தையும் பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தையும் கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உதவி செய்கின்றன

.

ரசாயன விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பன்டாசிம் என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் வைக்கவும். பின்பு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஏக்கருக்கு தேவையான விதைக்கு 200 கிராம் (ஒரு பொட்டலம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 200 கிராம் (ஒரு பொட்டலம்) ஆகியவற்றை 500 மில்லி ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின் விதைப்பதற்கு பயன்படுத்தவும்.
உயிர் எதிர்கொல்லி விதை நேர்த்தி,
உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். அதை மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈர சாக்கிலிட்டு நிழலில் உலர்த்தி பின்பு இருட்டறையில் வைத்து இருந்து மூன்று முதல் ஐந்து மில்லி மீட்டர் வரை முளைக்கட்ட வேண்டும். விதைப்பதற்கு முன்பு முளைகட்டிய விதைகளை ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்) ஒரு பாக்கெட் (200 கிராம்) பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நாற்றின் வேர்களை நனைத்தல்
ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 10 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களின் வேர்களை குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது. சூடோமோனாஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியா மண்ணில் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் தண்ணீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்களான குலை நோய் இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்துகிறது. மேலும் சூடோமோனாஸ் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுவதால் பயிர்கள் செழித்து திரட்சியுடன் வளர்ந்து மகசூல் அதிகரிக்கின்றது. இத்துடன் பயிர்களில் எதிர்ப்புத் திறனைக் கூட்டி, பூச்சித்தாக்குதலைக் குறைக்கும்.

விதை நேர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

ரசாயன பூஞ்சான மற்றும் பூச்சி கொல்லிகளால் விதை நேர்த்தி செய்தால் குறைந்தது 24 மணி நேரம் இடைவெளி விட்டு பின்புதான் உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உயிர் உரங்களுடன் கலக்க கூடாது. விதைகளை நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.

இத்தகைய மிக சிக்கனமான எளிய தொழில்நுட்பமான விதைநேர்த்தி முறைகளை கடைபிடிப்பதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய்களை வரும்முன் தடுத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். ஏனெனில் நல்ல விதையும் விதை நேர்த்தியும் மட்டுமே 10 முதல் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க செய்கின்றன விவசாயிகள் அனைவரும் எளிய தொழில்நுட்பமான விதை நேர்த்தி முறையை கடைபிடித்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love