January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.8

பதினோறு இலட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேன்று (8.1.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து / பச்சைபயிறு) ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 11 இலட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான்கள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் தார்ப்பாய்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைப் பயிர்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல் தரிசில் பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதின் மூலம் மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் இலாபமும் கிடைக்கிறது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love