விருதுநகர், டிச.23
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் நடப்பு மாதம் வரை நெல் சாகுபடி பரப்பு 500 எக்டராக உள்ளது. மேலும் விவசாயிகள், கண்மாய்களில் 3 மாதம் வரை நீர் இருப்பு உள்ளதால் தற்போதும் நடவுப்பணி மேற்கொண்டு வருகிறார்கள். நெற் பயிரினை தாக்கும் நோய்களில் அதிக மகசூல் இழப்பினை ஏற்படுத்தும் குலை நோய் முக்கியமானதாகும். சேமிப்பு நெல் விதைகள் மற்றும் ஏற்கனவே தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அடுத்த பருவ நெல் பயிருக்கு எளிதாகப் பரவும். இந்நோயின் பூசண வித்துக்கள் காற்றில் வெகு தூரம் பரவும் இயல்புடையதால் மற்ற நெல் வயல்களுக்கும் எளிதாக பரவும்.
இந்நோயினை கட்டுப்படுத்த நெல் வயல்களுக்கு அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். தழைச்சத்து உரத்தினை மூன்றாக பிரித்து இடவேண்டும். வரப்புகள் மற்றும் பாத்திகளை களைகள் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குலை நோய் அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் மற்றும் தூர்களை எரித்து விட வேண்டும்.
விதை நேர்த்தி : சூடோமோனஸ் புளோரசன்ஸ் மருந்தினை 10 கிராம் / ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பு பணி மேற்கொள்ளப் பட வேண்டும்.