“தழைச்சத்து தொழிற்சாலை (நைட்ரஜன் ஃபேக்ட்ரி)” என அழைக்கப்படும் பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதால் அப்பயிர்களின் மூலம் கிடைக்கும் மகசூல் மட்டுமன்றி அதனுடன் பயிரிடப்படும் பயிர்களுக்கும் நன்மை உண்டாவதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை நன்றாக கிடைக்கப்பெற்று நெல் விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. நெல் வயல் வரப்பில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறுவகைகளை பயிடுவதால் பல வகைகளில் நன்மை உண்டாகும்.
பொதுவாக பயறுவகைப் பயிர்கள் வளிமண்டலத்தில் காணப்படும் தழைச்சத்தினை கிரகித்து அவற்றின் வேர்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் சேகரித்து வைக்கும். இதனால் மண்ணில் தழைச்சத்து அதிகரிப்பதால் அருகிலுள்ள பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வகைப் பயிர்கள் இருக்கும் இடத்தில் நன்மை செய்யும் பொறி வண்டுகள் அதிகளவில் காணப்படும். அப்பொறி வண்டுகள் நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் போன்ற பூச்சி வகைகளின் முட்டைகளை உண்பதால் அப்பூச்சிகளின் தாக்குதல் குறைக்கப்படுகிறது.
இதனால் நெற்பயிரின் பயிர் பாதுகாப்புக்கான செலவு குறைக்கப்படுகிறது. வயல் வரப்பில் நடப்படும் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயிர்களால் வரப்பில் தேவையற்ற களைப்பயிர்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. இது தவிர இப்பயிர்களில் விளையும் பயறுகள் மூலமும் வருமானம் கிடைக்கிறது. பயறு அறுவடைக்குப்பின் தழையானது தீவனமாகவும், தழைச்சத்து உரமாகவும் பயன்படுகிறது. ஒரு ஏக்கர் வயல் வரப்பில் நடுவதற்கு ஒரு கிலோ விதை போதுமானது. வரப்பின் உட்புரம் கீழிருந்து ஒரு அடி உயரத்தில் ஒரு இன்ச் ஆழத்தில் விதையினை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி விட வேண்டும். நெல் விதைப்பு மற்றும் நடவு தினத்தன்று பயறுவகைகளை வரப்பில் நட்டால் போதுமானது. இவற்றிற்கென தனியாக தண்ணீர் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கிடையாது.