தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினரால் வழங்கப்படும் விதைச்சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து வயல் தரம் தேறிய விதைப்பண்ணைகள் அறுவடை செய்யப்படும் போதும், பின்பு வயல் மட்ட விதைகளை பாதுகாப்பதிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா தெரிவித்தார்.
வயல்தரம் தேறிய விதைப்பண்ணைகளில் இயந்திர அறுவடை செய்யும் போது பிற இரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க அறுவடைக்கு முன்பாக இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு இயந்திரத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் முதல் இரு மூட்டைகளை விதைக்கு தவிர்த்து விட்டு மீதமுள்ள விதைகளை விதைக்காக எடுத்துக் கொள்வது சாலசிறந்தது. இதன் மூலம் இயந்திர அறுவடையினால் ஏற்படும் பிற இரக கலப்பு தவிர்க்கப்படுகிறது.
விதைப்பண்ணைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் விதைகளை புதிய கோணிப்பைகளில் மட்டுமே சேகரிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட வயல்மட்ட விதைகளை உடனடியாக காய வைத்துஈரபதம் 13 சதவீதத்துக்குகீழ் கொண்டு வர வேண்டும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நெல் விதைகளில் பூஞ்சாண வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதுடன் நெல் விதைகளின் நிறம் மாறுவதோடு முளைப்புத்திறனும் பாதிக்ககூடும். உலர் களத்தை நன்கு சுத்தம் செய்த பின்பு நெல் விதைகளை களத்தில் பரப்பி மிதமான வெயிலில் காய வைத்து அடிக்கடி கிளறி விட்டு படிப்படியாக ஈரபதத்தை குறைக்க வேண்டும். இதன் மூலம் நெல் விதைகளின் முளைப்புத்திறன் பாதுகாக்கலாம்.
நன்கு காய வைக்கப்பட்டு 13 சதவீதத்துக்கு கீழ் ஈரபதமுடைய வயல்மட்ட விதைகளை புதிய கோணிபைகளில் பிடித்து அதில் விதைச்சான்று எண், பயிர், இரகம், சான்றளிப்பு நிலை போன்ற விவரங்களைஎழுதிசணல்கொண்டுதைத்து ஈயக் குண்டு கோர்த்து, சுத்தி அறிக்கை பெற ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விதைச்சான்று அலுவலர் விதைக்குவியலை ஆய்வு செய்து முத்திரையிட்டு, அங்கீகாரம் பெற்ற விதையினை விதை சுத்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவார். விதைசுத்தி நிலையத்தில் தொடர் சான்று பணி மேற்கொள்ளப்படும்.