புது தில்லி, மே 5
இந்தியா பெஸ்டிசைட்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, கடந்த பிப்ரவரி மாதத்தில் செபிக்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை பரிசீலனை செய்து, தற்போது செபி அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.100 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.700 கோடிக்கு, பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்பாக, ரூ.75 கோடியை தனிப்பட்ட பங்குகள் விற்பனை வாயிலாக திரட்டவும் திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இந்நிறுவனத்துக்கு, இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
வேளாண் வேதியியல் தொழில்நுட்ப பிரிவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.