புது தில்லி, மே 12
வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, சோனா காம்ஸ்டார் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இது குறித்து விரிவான செய்தியாவது:
சோனா காம்ஸ்டார் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.6,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில், ரூ.300 கோடிக்கு புதிய பங்குகளையும்; பங்குதாரரின், ரூ.5,700 கோடி மதிப்பிலான பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. சோனா காம்ஸ்டார், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த பிப்ரவரியில், செபிக்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பரிசீலனைக்கு பின் இப்போது அனுமதி வழங்கி உள்ளது செபி. மேலும், திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைப்பது மற்றும் பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட பல சிக்கலான தயாரிப்புகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும், பல பாகங்களுக்கான வடிவமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மாருதி சுசூகி தொடங்கி, நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றுக்கு, இந்நிறுவனம் பாகங்களை சப்ளை செய்து வருகிறது. இந்த பிரிவில் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் இரண்டு பெரிய இந்திய நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.